×

‘விசாகப்பட்டினத்தில் படகுகளில் பயங்கர தீ’ யூடியூபில் லைக்குகளை வாங்க வீடியோ எடுத்து பதிவிட்டேன்: கைதான யூடியூபர் வாக்குமூலம்

திருமலை: விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக யூடியூபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் படகில் மதுவிருந்தில் ஏற்பட்ட மோதலில் தீ விபத்து நடந்ததும், லைக்குகளை வாங்குவதற்காக வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டதும் தெரிய வந்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் நிறுத்தி வைத்திருந்த படகுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பல கோடி மதிப்பிலான 40க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களின் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது படகுகள் எரிந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த மீனவர் ஒருவர் அதை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நானி என்பவருக்கு சொந்தமான 2 மீன்பிடி படகுகள் உள்ளது. இவர் லோக்கல் பாய் நானி என்ற பெயரில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதுடன் யூடியூப் சானலும் நடத்தி வருகிறார். கடலில் மீன் பிடித்தல் உட்பட பல காட்சிகளை தயாரித்து இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். நானியின் மனைவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சீமந்தம் நடந்தது.

பின்னர், மீன்பிடி துறைமுகத்தில் நண்பர்களுக்கு மதுவிருந்து ஏற்பாடு செய்துள்ளார். அப்போது, படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் ஒரு படகில் ஏற்பட்ட தீயானது அடுத்தடுத்து மற்ற படகிற்கும் பரவியது. தீ விபத்து நடந்த நேரத்தில் அங்கேயே இருந்த நானி, யூடியூப்பில் லைக்குகளை வாங்குவதற்காக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு மத்தியில் இருந்தபடி வீடியோ பதிவு செய்து, அதனை தனது யூடியூப்பில் பதிவு செய்தது தெரிய வந்தது. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து விசாகப்பட்டினம் முதலாவது நகர போலீசார் நேற்று யூடியூபர் நானியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தீயினால் பாதிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் 80 சதவீதம் இழப்பீடு வழங்க முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் படகுகளுக்கும் கட்டாயம் காப்பீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

The post ‘விசாகப்பட்டினத்தில் படகுகளில் பயங்கர தீ’ யூடியூபில் லைக்குகளை வாங்க வீடியோ எடுத்து பதிவிட்டேன்: கைதான யூடியூபர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : YouTube ,Thirumalai ,YouTuber ,Visakhapatnam ,
× RELATED பெண் போலீசார் குறித்து சர்ச்சை பேச்சு...