×

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 3,543 பயனாளிகளுக்கு பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்து பாதிக்கப்பட்ட 3,543 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார். தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொள்ளப்படும் வகையில் 3,543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, 7 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கி, ரூ.14.86 கோடியில் கட்டப்பட்டுள்ள திருவட்டார், கிள்ளியூர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் தேனியில் கூட்டரங்கக் கட்டிடம், இணையவழிச் சேவையின் மூலமாக நிலஅளவைக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது அந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1959ம் ஆண்டு விருத்தாசலம் விஜய மாநகரம் மற்றும் புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு மறுகுடியமர்த்தப்பட்ட கிராம நிலங்களில் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் கடந்தாண்டு அரசாணை வெளியிடப்பட்டு சுமார் 3,000 குடும்பங்கள் பயனடையும் வகையில் வருவாய் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி, விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நிலவரித் திட்ட அலகு ஏற்படுத்தப்பட்டு நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விஜயமாநகரம் கிராமத்தில் 2,676 நபர்களுக்கு 1,371 பட்டாக்களும், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 8,67 நபர்களுக்கு 4,75 பட்டாக்களும், என மொத்தம் 3,543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கிடும் வகையில் 7 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் மற்றும் கிள்ளியூரில் ரூ.7.50 கோடி கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ரூ.3.75 கோடி கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.3.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கூட்டரங்கக் கட்டடம், என மொத்தம் ரூ.14.86 கோடியில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் பிரபாகர், நில நிர்வாக ஆணையர் நாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ராஜாராமன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

* எந்நேரத்திலும்.. எவ்விடத்தில் இருந்தும்..
பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை செய்ய www.tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார். இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை/வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரர் www.eservices.tn.gov.in என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

The post நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 3,543 பயனாளிகளுக்கு பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Neyveli Lignite Coal Company ,Chief Minister ,M.K.Stalin. ,CHENNAI ,M. K. Stalin ,Neyveli Brown Coal Company ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...