×

17ம் நூற்றாண்டை சேர்ந்தது பட்டம்புதூரில் சிவன் கோயிலுக்கான தேவதான கல்வெட்டு கண்டுபிடிப்பு

விருதுநகர், நவ.21: விருதுநகர் அருகே பட்டம்புதூரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் களஆய்வில், சூலக்கல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக சிவன், காளி, அய்யனார் கோவில்களுக்கு வழங்கப்படும் தானத்தை குறிக்கும் வகையில் சூலம் இடம்பெற்ற கற்களை நட்டு வைப்பது வழக்கம். இதை தேவதானம் என்பர். அந்த வகையில் கண்டறியப்பட்டுள்ள தேவதான கல்லானது, 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உடையது. கல்லின் மையத்தில் சூலம் ஒன்று கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது. சூலத்தின் இருபுறமும் சூரியன், பிறை நிலவு இடம் பெற்றுள்ளது.

கொடுத்த தானமானது சூரியன், சந்திரன் இருக்கும் வரை தானம் செல்லுபடியாகும் என்பது பொருளாகும். சூலத்தின் இருபுறமும் மூன்று வரி தமிழ் கல்லெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி அம்மன் என்றும் சொக்க என்றும் உள்ளன. சொக்க என்பதை சொக்கநாதராக கருதலாம். இந்த கல்வெட்டு மூலம் தேவதானம் கொடுக்கப்பட்ட கோவிலின் பெயர் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோவில் என்பது தெளிவாகிறது. மேலும் கல் எழுத்திற்கு கீழாக மீனாட்சி அம்மன் நின்ற கோலத்தில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

அருகே சிவலிங்கமும் இடம் பெற்றுள்ளது. இதன் காலமானது 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். மேலும் கல்வெட்டு இடம் பெறும் கோவிலானது கருவறை, நான்கு கால் மண்டபத்துடன் காணப்படும் சிறிய வகை கற்றளியாக காட்சி தருகிறது. இங்கு தற்போது விநாயகரை வைத்து வழிபாடுகின்றனர். நுழைவுவாயிலில் கஜலட்சுமி இடம் பெறுகிறார். மண்டப கற்களில் வளமையை குறிக்கும் மீன் சின்னங்கள் இடம் பெறுகின்றன. இவையெல்லாம் வைத்து பார்க்கம் போது நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஒரு சிவன் கோவில் இருந்தது தெளிவாகிறது என்றனர்.

The post 17ம் நூற்றாண்டை சேர்ந்தது பட்டம்புதூரில் சிவன் கோயிலுக்கான தேவதான கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Pattambudur ,Virudhunagar ,Pandyanadu Cultural Center ,Virudhunagar, Sridhar ,Thamaraikannan ,Chulakkal ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...