×

உச்ச நீதிமன்றத்தில் மசோதாக்களுக்கு அனுமதி தந்திருப்பதாக ஆளுநர் கூறுவது எங்களுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: மசோதாக்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் கூறியுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது குட்கா வழக்கு தொடர அனுமதி வழங்கி கோப்புகள் அனுப்பி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவேற்றி அனுப்பிய 5 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார். 10 மசோதாக்களை திருப்பி அனுப்பி அவையெல்லாம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த 18ம் தேதி மதியம் 3 மணிக்கே ஆளுநர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது நடவடிக்கைக்கு அனுமதி கேட்டுள்ளோம். தற்போது ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றவைகளுக்கு எதற்கு அனுமதி தருகிறார் என்று பார்க்க வேண்டும். அது எந்தெந்த முன்னாள் அமைச்சர்கள் மீது என்று வெளிப்படையாக சொல்ல முடியாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது அவரது கடமை. ஆளுநர் விவகாரத்தில், விமர்சனம் செய்யக்கூடாது. இந்த விவகாரம் ஆளுநருக்கு கொட்டு என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். மசோதாக்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதாக ஆளுநர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றி. 13ம் தேதியே ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்று அன்றைக்கே கூறி இருந்தால் நாங்கள் ஏன் கொடுத்த ஒப்புதலை மீண்டும் சேர்க்கப்போகிறோம்.

இதை, உச்ச நீதிமன்றத்தில் போய் தான் ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நீர்த்து போகும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, நாங்கள் சட்டமன்றத்திலேயே எவ்வாறு அது நீர்த்து போகும் என்று அவரை கேட்டுள்ளோம். புதிய சட்டம் கொண்டு வந்தால் அது பழைய சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் மாதிரி இருக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அது அவ்வாறு இல்லை. அந்த சட்டத்தை மீண்டும் திருப்பி தான் அனுப்புகிறோம். அதனை மசோதா நிறைவேற்றி அனுப்புகிறோம். நீர்த்து போக கூடிய செயலே கிடையாது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

* தமிழிசைக்கு பதிலடி
அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சரும் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு கூறும் ஆளுநர் தமிழிசை, தெலங்கானா முதலமைச்சரை சந்தித்து பேசுவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ளலாம். அதை விடுத்துவிட்டு சின்ன மாநிலத்தில் அமர்ந்து கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டி வருகிறார். இப்படி இருக்கையில் இவர், எங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இணக்கமான போக்கை தான் திமுக கடைபிடிக்கிறது. திமுகவை போல சகிப்புத்தன்மை உடைய இணக்கமான போக்கை அனுசரிக்கும் கட்சி இருக்கவே முடியாது. சகிப்புத்தன்மையின் உச்சகட்டத்திற்கு சென்ற பிறகுதான் நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்கின்றோம்’ என்றார்.

* ஆளுநர் அடிபணிந்தாரா?
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஆளுநர் அடி பணிந்து விட்டாரா? என்ற கேள்விக்கு, ‘இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சட்டமன்ற தீர்மானம் நிச்சயமாக இந்த வழக்கிற்கு உறுதுணையாக இருக்கும். ஆளுநரை, அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். சிபிஐயிடம், முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டார் என்பதை‌ நாங்களும் வலியுறுத்துவோம்’ என்றார்.

The post உச்ச நீதிமன்றத்தில் மசோதாக்களுக்கு அனுமதி தந்திருப்பதாக ஆளுநர் கூறுவது எங்களுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Ragupati ,Pudukkottai ,Governor ,Pudukkotta ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு