×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு விதித்த தண்டனை உறுதி: மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவிக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 1991-96ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த ஏ.எம்.பரமசிவன், அவரது மனைவி நல்லம்மாள் ஆகியோர் மீது 1997ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2000 நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பரமசிவன் மற்றும் அவரது மனைவி நல்லம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2000ல் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது, 2015 மார்ச் மாதம் பரமசிவன் மரணமடைந்தார். இந்நிலையில், அவர் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த 20 ஆண்டுக்ளுக்கும் மேல் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், நல்லம்மாளின் மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையை அனுபவிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு விதித்த தண்டனை உறுதி: மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,minister ,AM Paramasivan ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...