×

‘60 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு கண்ட முதல்வருக்கு நன்றி’: பயனாளிகள் பேட்டி

என்.எல்.சி நிறுவனத்தால் நில எடுப்பு செய்யப்பட்ட 3,543 பேருக்கு பட்டா வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது அந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் 1959ம் ஆண்டு விருத்தாசலம் வட்டம், விஜயமாநகரம் மற்றும் புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு மறுகுடியமர்த்தப்பட்ட கிராம நிலங்களில் நிலவரித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. அதன்படி, மறுகுடியமர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் வருவாய் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் கடந்த 2022ம் ஆண்டு மே 26ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கென, விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நிலவரித் திட்ட அலகு ஏற்படுத்தப்பட்டு நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டன. அதன்படி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில், மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு விஜயமாநகரம் கிராமத்தில் 2676 நபர்களுக்கு 1371 பட்டாக்களும், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 867 நபர்களுக்கு 475 பட்டாக்களும், என மொத்தம் 3,543 பேருக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் 7 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

இதுகுறிது நிருபர்களிடம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளி வெங்கடாசலபதி கூறியதாவது: கடலூர் மாவட்டம், கூரைப்பேட்டை என்ற கிராமத்தில் நாங்கள் வசித்து வந்தோம். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்குவதற்காக. எங்களது நிலம், வீடு, மனை அனைத்தையும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், நிலக்கரி வெட்டுவதற்காக இடத்தை எடுத்துக் கொண்டு எங்களுக்கு மாற்று இடமாக புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு அந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா, சிட்டா ஏதுவும் வழங்கப்படவில்லை.

அந்த தரிசு நிலங்களை வைத்து நாங்கள் வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, எந்த ஒரு கடனையும் பெற்று பயனடைய முடியாத நிலையில் இருந்தோம். புதுக்கூரைப்பேட்டை மற்றும் விஜயமாநகர கிராமங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து தற்போதைய அரசின் துரித நடவடிக்கையால் எங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களால் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு கண்ட முதல்வருக்கு என் சார்பாகவும், எங்கள் கிராம மக்களின்சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வரிடம் பட்டா பெற்ற சிவக்குமார் பேசியதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுரங்கம் வெட்டும் பணிக்காக எங்களுக்கு சொந்தமான நிலத்தை எடுத்துக்கொண்டு எனக்கு புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் இடம் தரப்பட்டது. புதிய அரசு வந்தவுடன் எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து தற்போது எங்களுக்கு பட்டா வழங்கியுள்ளது. அதேபோல், பயனாளி அண்ணாதுரை கூறுகையில்:கலைஞர் ‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம்’ என்று குறிப்பிட்டதற்கேற்ப மக்களின் தேவையறிந்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

The post ‘60 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு கண்ட முதல்வருக்கு நன்றி’: பயனாளிகள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,NLC ,Neyveli ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...