×

சமூக நீதியை காப்பாற்றிய நேருவை பழித்து பேசிய ராமதாசுக்கு கண்டனம்: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அனைந்திந்திய அளவில் உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியை தமிழகம் கட்டிக்காத்து வருவது வரலாற்றுப் பேருண்மை. சமூக நீதியை காப்பாற்ற அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்த நேருவை, பாமக நிறுவனர் ராமதாஸ் பழித்து பேசுவது முறையாக இருக்காது. ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட அவதூறு கருத்தை வன்மையாக கண்டிக்கிறது. 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும், எந்த முடிவும் எடுக்காமலும் நிறுத்தி வைத்த தமிழக ஆளுநரின் சட்ட விரோதப் போக்கை கண்டிக்கிற வகையில், தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

இத்தகைய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை இக்கூட்டம் பாராட்டுகிறது.பாஜ ஆட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தமிழ்நாடு காங்கிரஸ் விரைவில் சிறு பிரசுரமாக வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டின் அடிப்படையில் கிராமங்கள்தோறும் பரப்புரை மேற்கொள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சிகளுக்கு விரைவில் செயல் திட்டம் வகுக்கப்பட இருக்கிறது. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன் குமார், டில்லி பாபு, அடையாறு துரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post சமூக நீதியை காப்பாற்றிய நேருவை பழித்து பேசிய ராமதாசுக்கு கண்டனம்: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Ramadass ,Nehru ,Congress ,Chennai ,Tamil Nadu ,Sathyamurthy Bhavan ,Ramdas ,
× RELATED சொல்லிட்டாங்க…