×

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இளம்பெண் தவறவிட்ட நகை 24 மணி நேரத்திற்குள் மீட்பு: போலீசாருக்கு பாராட்டு

அண்ணாநகர்: அரும்பாக்கம் ஜானகிராமன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சஞ்சனா (26). துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் திருவேற்காடு பகுதியில் நடந்த உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு புறப்பட்டுள்ளார். இதற்காக, தந்தை ஜெயக்குமாருடன் பைக்கில் அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை சென்று, அங்கிருந்து ஆட்டோவில் திருவேற்காடு சென்றுள்ளார். மாலை, நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது, அவரது கையில் அணிந்திருந்த இரண்டரை சவரன் வளையல் மாயமானது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் தலைமையில் போலீசார், அப்பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு வாலிபர் கீழே கிடந்த வளையலை எடுத்து செல்லும் சாட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில், அரும்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்யும் பிரதீப் (33) என தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, சாலையில் கிடந்த தங்க வளையலை எடுத்தேன். அதை கேட்டு யாரும் உரிமை கோராததால், காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம், என்று இருந்தேன், என கூறியுள்ளார். அவரிடம் இருந்து வளையலை மீட்ட போலீசார், சஞ்சனாவிடம் ஒப்படைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நகையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

 

The post பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இளம்பெண் தவறவிட்ட நகை 24 மணி நேரத்திற்குள் மீட்பு: போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Poontamalli highway ,Annanagar ,Sanjana ,Arumbakkam Janakiraman ,Duraipakkam ,Dinakaran ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’