×

வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் ரூ.22.3 கோடியில் 24 மணி நேரமும் இயங்கும் நடைபாதை வளாகம்: டெண்டர் இறுதி செய்யப்பட்டது

சென்னை: வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் ரூ.22.3 கோடியில் 24 மணி நேரமும் இயங்ககூடிய நடைபாதை வளாகம் அமைக்க டெண்டர் இறுதி செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியானது சிறந்த பொழுதுபோக்கு வசதிகளை சென்னை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் ரூ.19.81 கோடியில் 24 மணி நேரமும் இயங்ககூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதேபோல், மண்டலம் 5ல் எம்.சி ரோட்டில் 24 மணி நேரமும் இயங்ககூடிய நடைபாதை வளாகம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இந்த வளாகம் அமைக்க சுமார் ரூ.26.23 கோடி அமைக்க ஒதுக்கப்பட்டது. தற்போது இதற்கான பணிகளை மேற்கொள்ள டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது காதர் நவாஸ்கான் சாலையில் ரூ.19.81 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று ராயபுரத்தில் உள்ள எம்.சி ரோட்டில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த பணிக்காக தற்போது டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகம் சுமார் 1 கி.மீ தூரத்தில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்படும். இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலையை வெளிநாடுகளில் உள்ளதை போல் சர்வதேச தரத்திலான சாலையாக மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி, அகலமான நடைபாதைகள், பூங்காக்கள், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளது. சாலையின் முன்பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு, கார்பன் உமிழ்வு இல்லாத சாலையாகவும் மாற்றப்பட உள்ளது. இந்த நடைபாதையில் எல்லா கடைகளும் ஒரே அளவில் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் நடைபாதை, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும். துணை கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி, மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் செல்ல பிரத்யேக குழாய்கள், புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், இந்த பணிகள் எல்லாவற்றையும் சென்னை மாநகராட்சியின் துறைகளே மேற்கொள்ளும். மின்சார துறை,குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் இந்த சாலையில் பணிகள் மேற்கொண்டால் தாமதம் ஆகும், நிதி செலவும் அதிகமாகும் என்பதால் மாநகராட்சியின் கீழ் உள்ள துறைகளே ஒன்றிணைந்து பணிகளை வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த சாலையின் முன்பக்கம் வண்ண வண்ண விளக்கால் அலங்கரிக்கப்பட்ட வளைவு, இருபுறமும் அலங்கார விளக்குகள், இருக்கைகள், பூந்தொட்டி, ஒளிரும் பொல்லார்டுகள், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களுடன் அமைக்கப்பட உள்ளது. தரைகள் கிராணைட்,பாவெர்,கோடா போன்ற கற்களால் அலங்கரிக்கப்படவுள்ளது. இருபுறமும் விளக்குகள் பல்வேறு வடிவங்களால் ஒளிரூட்டப்படவுள்ளது இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. முழுக்க முழுக்க நடைபாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஓரிரு வாரங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவை அமைக்கப்பட்டால் வடசென்னை மக்களுக்கு சிறந்த பொழுது போக்காக அமையும்,’’ என்றார்.

 

The post வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் ரூ.22.3 கோடியில் 24 மணி நேரமும் இயங்கும் நடைபாதை வளாகம்: டெண்டர் இறுதி செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Vannarpettai MC Road ,Chennai ,Vannarappettai MC Road ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...