×

சவுகார்பேட்டை, என்எஸ்சி போஸ் சாலை உள்பட 6 நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின; மதிப்பிடும் பணி துவக்கம்

சென்னை: சவுகார்பேட்டை, என்எஸ்சி போஸ் சாலை மற்றும் வீரப்பன் தெருவில் உள்ள 6 நகைக் கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விற்பனையாவதில் சென்னை சவுகார்பேட்டை 2வது இடத்தில் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட நகை கடைகள், 500க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. வெளி மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நகை கடைகளிலும், பட்டறைகளிலும் வேலை பார்க்கிறார்கள். இங்குள்ள நகை கடைகளில் உரிய வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வது, கணக்கில் காட்டாமல் பணம் கையாளப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நகைக் கடைகளில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை செய்யப்படுகிறதா என சவுகார்பேட்டை, என்எஸ்சி போஸ் சாலை, வீரப்பன் தெரு உள்பட 6 இடங்களில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல், என்எஸ்சி போஸ் சாலையில் வெங்கடேஸ்வரா நகை கடை உள்பட மேலும் 2 நகைக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுபோல, வீரப்பன் தெருவில் டிபி ஜூவல்லர்ஸ் என 2 கடைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த கடைகளில் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அமலாக்கதுறை சோதனை நடத்திய என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள மோகன்லால் என்பவருடைய நகைக்கடையில் கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது, கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் விற்பனையில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நகை கடைகளில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நகை கடை வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post சவுகார்பேட்டை, என்எஸ்சி போஸ் சாலை உள்பட 6 நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின; மதிப்பிடும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Saugarpet, NSC Bose Road ,CHENNAI ,Chaukarpet ,NSC Bose Road ,Veerappan Street ,Dinakaran ,
× RELATED சென்னை சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!