×

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்: காலாவதி பலகாரங்கள் பறிமுதல், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

 

திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். மேலும் காலாவதியான இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருத்தணி, செங்குன்றம், பூந்தமல்லி, ஆவடி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பொன்னேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் திருவள்ளூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி ஏராளமான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் பயன்படுத்தும் நடைபாதை கடைகளை ஆக்கிரமித்து நகராட்சி கடைகளுக்கு வெளியே சுமார் 5 மீட்டர் தொலைவிற்கு பூ கடைகளை அமைத்து பயணிகளுக்கு பெரும் இடையூறு செய்வதாகவும், இதை கேட்கும் பயணிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் திருவள்ளூர் நகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவின் பேரில் உதவி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுதர்சன், நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர்கள் ஜெயசீலன், ஜனார்த்தனன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைகளுக்கு வெளியே பயணிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை உள்ளே நகர்த்தி வைக்குமாறு எச்சரித்தனர். மேலும் ஒரு சில கடைகளை அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் மூதாட்டி ஒருவர் வைத்திருந்த ஸ்வீட் ஸ்டாலில் ஆய்வு செய்தபோது காலாவதியான இனிப்பு, கார வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இனிப்பு, கார வகைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளை எலிகள் கடித்து வைத்திருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பொருட்களை விற்பனை செய்ததற்காக கடையை சீல் வைத்து மூடினர். இதனால் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

The post திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்: காலாவதி பலகாரங்கள் பறிமுதல், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur bus station ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...