×

கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் திங்கட்கிழமை காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைய இருக்கிறது. இத்தகைய முக்கியத்துவத்தினால் தேர்தல் பரப்புரை மிகமிக கடுமையாக அமைந்திருந்தது. இந்நிலையில், பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலின் மூலம் மக்களை பிளவுபடுத்துகிற நச்சு கருத்துகளை முறியடிப்பதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மேற்கொண்ட சூறாவளி சுற்றுப்பயணம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதன் காரணமாக ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிக பிரகாசமாக அமைந்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

பிரதமர் மோடியின் சாம, பேத, தான, தண்ட அணுகுமுறைகளை முறியடிப்பதில் ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில் கூறப்பட்ட கருத்துகளுக்கு எதிரான கருத்து கூற முடியாத நிலையில் பா.ஜ.க. திரனற்று இருந்தது. குறிப்பாக, வகுப்புவாத அணி திரட்டலுக்கு எதிராக ராகுல்காந்தியின் பரப்புரையில் கூறப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதன்மூலம், வகுப்புவாத அரசியலை முறிடிப்பதில் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நெஞ்சுரமிக்க வகையில் பரப்புரை மேற்கொண்டதற்காக இக்கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது.

கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேர்தல் களத்தில் முனைப்புடன் செயலாற்றுவதற்கு அடித்தளமாக இருப்பது வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடி குழுக்களை அமைத்து, நிலை முகவர்களை நியமிப்பது போன்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். காந்தியப் பேரெழுச்சியால், இந்தியத்திருநாடு கண்ட விடுதலையும், உருவான மதச்சார்பற்ற தன்மைகளும், நமது ஆன்மாவான அரசியல் சட்டமும், இன்றைக்கு முழுமையான அச்சுறுத்தலில் சிக்கித் தத்தளிக்கிறது.

தண்டி யாத்திரையால் இந்தியர்களின் மன ஒற்றுமையை உருவாக்கிய மகாத்மா காந்தி அடிகள் போல, இந்திய ஒற்றுமைமைப் பயணத்தின் வழியே இளம் தலைவர் ராகுல் காந்தி இந்தியர்களின் இதயங்களை ஒருங்கிணைத்ததால் இமாச்சலமும் கர்நாடகமும் இந்தியர்களின் திசைகாட்டிகளாக உருவெடுத்துள்ளன. அனைந்திந்திய அளவில் உருவாகியுள்ள “இந்தியா” கூட்டணியை தமிழகம் கட்டிக்காத்து வருவது வரலாற்றுப் பேருண்மை. அந்தக் கூட்டணியை மேலும் வலிமையாக்கி செழுமையாக்குவது இப்போதுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஒவ்வொருவரின் முதன்மைக் கடமை என்பதை இக்கூட்டம் வலியறுத்துவதுடன், வாக்குச்சாவடி நிலைமுகவர்களை விரைந்து நியமித்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரால் கடந்த மாதம் மாவட்டத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமிக்கும் பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் நியமித்து அப்பணியை பூர்த்தி செய்திட அறிவுறுத்துவதுடன், அவர்களுக்கான பயிற்சிக்கூட்டங்களை 2024 ஜனவரிக்குள் நடத்தி நிறைவு செய்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும், எந்த முடிவும் எடுக்காமலும் நிறுத்தி வைத்த தமிழக ஆளுநரின் சட்ட விரோதப் போக்கை கண்டிக்கிற வகையில், தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்தின் மூலம் பத்து மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக ஆளுநருக்கு இருக்கிறது.

இந்தப் பின்னணியில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, தீர்மானத்தின் மூலம் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சரை இக்கூட்டம் பாராட்டுகிறது. மாநில அரசுகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் போக்கை கண்டிக்கிற வகையிலும், தமிழக ஆளுநரின் காழ்ப்புணர்ச்சி அரசியலை முறியடிக்கிற வகையிலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று இக்கூட்டம் கருதுகிறது.

இந்தியாவிலேயே சமூகநீதிக்காக குரல் கொடுப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நீண்ட நெடுங்காலமாக நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டிற்கு அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே ஆபத்து நேர்ந்த போது, அதற்காக முதல் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இதன்மூலம் தமிழகம் அனுபவித்து வந்த இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு, சமூகநீதி நிலைநாட்டப்பட்டது. இதற்காக தந்தை பெரியார் குரல் கொடுத்து போராடியதையும், முதல் திருத்தம் கொண்டு வர மூலவராக இருந்து செயல்பட்ட பெருந்தலைவர் காமராஜரையும், திருத்தத்தை நிறைவேற்றிய பிரதமர் நேருவையும் தமிழக மக்கள் என்றைக்கும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூறுவார்கள்.

ஆனால், சமீபத்தில் ஒரு கூட்டம் ஒன்றில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் பேசும் போது, முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் காகா. கலேல்கர் முதல் பிரதமர் பண்டித நேருவிடம் அறிக்கையை 1954 இல் சமர்ப்பித்த போது, இதில் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறதா ? என்று கேட்டதாகவும், அதற்கு கலேல்கர் இல்லை என்று கூறியதும் இந்த அறிக்கையை குப்பைக் கூடையில் தூக்கி எறியுங்கள் என்று பண்டித நேரு கூறியதாகவும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறியிருக்கிறார்.

இந்த கூற்றுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். இதற்கான ஆதாரத்தை அவர் வெளியிடுவாரா ? முதல் திருத்தம் கொண்டு வந்து சமூக நீதியை காப்பாற்றிய பண்டித நேருவை பழிப்பது முறையாக இருக்காது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் ஆதாரமற்ற இத்தகைய உள்நோக்கம் கொண்ட அவதூறு கருத்தை இக்கூட்டம் வன்மையாக
கண்டிக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்றன. ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மதரீதியிலான மக்களை பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியல், விவசாயிகளின் விரோத போக்கு, பிரதமரின் அதிகாரக் குவியல், கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகள், அதானி, அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து குவிப்புக்கு துணை போவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவிப்பது, ஊழல் முறைகேடுகள் போன்றவற்றை ஆதாரத்துடன் பட்டியலிட்டு பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை (Charge Sheet) தமிழ்நாடு காங்கிரஸ் விரைவில் சிறு பிரசுரமாக வெளியிட உள்ளது.

இந்த வெளியீட்டின் அடிப்படையில் கிராமங்கள்தோறும் பரப்புரை மேற்கொள்ள மாவட்ட
காங்கிரஸ் கமிட்டிகளுக்கு விரைவில் செயல் திட்டம் வகுக்கப்பட இருக்கிறது. இத்தகைய பணிகளை
மேற்கொள்வதன் மூலம் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை முறியடிக்கிற வகையில் செயல்பட, மாவட்டகாங்கிரஸ் கமிட்டியினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 

 

 

The post கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Congress Committee ,KS Alagiri ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Mr. ,K.S. Alagiri ,Satyamurthy ,Bhawan ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்