×

கஞ்சா மற்றும் செல்போன்களை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளை டிரோன் மூலம் கண்காணிக்க முடிவு: சிறைத்துறை நடவடிக்கை

சென்னை: கஞ்சா, செல்போன்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்காணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் டிரோன் பயன்படுத்த சிறைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் தற்போது சிறைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் புழல்-1, புழல்-2. வேலூர், கடலூர், சேலம், பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் அமைந்துள்ளது. 9 மத்திய சிறைகளில் கொடும் குற்றவாளிகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர விசாரணை கைதிகளும் உள்ளனர்.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் சிறைவாளிகள் சிலர் சிறை வளாகத்தில் சாராயம் காய்ச்சி குடித்த சம்பவங்களும் நடந்தது. மேலும், சிறை வாசிகளை பார்க்க வரும் உறவினர்கள் கஞ்சா மற்றும் செல்போன்கள் மறைத்து கொண்டு வருவதும், சில நேரங்களில் சிறை மதுல் சுவர் வழியாக சிறு பொட்டலங்களாக கஞ்சாவும் சிறை வாசிகளுக்கு வீசிய சம்பவங்களும் நடந்தது. மேலும், சிறையில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், சிறையில் அவர்களின் செல்பாடுகள் குறித்து அறிவும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் மத்திய சிறைகளில் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதைதொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள சென்னை புழல் உட்பட 9 மத்திய சிறைகளில் கஞ்சா, செல்போன்கள் மற்றும் சிறை கைதிகளின் செயல்பாடுகளை அறிய ‘டிரோன்’ மூலம் கண்காணிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியதை தொடர்ந்து, டிரோன் கொள்முதல் செய்ய சிறைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒரு சிறைக்கு 2 முதல் 3 டிரோன்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அந்தந்த சிறைத்துறை வளாகத்திலேயே பிரிவு தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் 9 மத்திய சிறைகளில் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கையால் சிறையில் கஞ்சா, செல்போன்கள் முற்றிலும் ஒழிக்க முடிவும் என்று சிறைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post கஞ்சா மற்றும் செல்போன்களை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளை டிரோன் மூலம் கண்காணிக்க முடிவு: சிறைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Prison ,Chennai ,Prison Action ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...