×

நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ரூ453.67 கோடியில் 4272 அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்


சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 9 மாவட்டங்களில் ரூ.453.67 கோடியில் 4272 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், முருகமங்கலம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடனும், தரை மற்றும் 5 தளங்களுடனும் 151 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 1260 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், செம்மஞ்சேரி திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 20 கோடியே 63 லட்சம் செலவில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; மதுரை மாவட்டம், இராஜாக்கூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 50 கோடியே 78 லட்சம் செலவில் 512 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, ஆத்திக்குளம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 30 கோடியே 43 லட்சம் செலவில் 320 புதிய அடுக்குமாடி குடியிருப்பு;

தர்மபுரி மாவட்டம், நம்பிப்பட்டி திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் 42 கோடியே 26 லட்சம் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குளம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 36 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் 384 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, ஈசாந்திமங்கலம் பகுதி-2 திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 3 கோடியே 45 லட்சம் செலவில் 32 புதிய அடுக்குமாடி குடியிருப்பு; திருநெல்வேலி மாவட்டம், ஜெபாகார்டன் திட்டப்பகுதியில் தரை மற்றும் 4 தளங்களுடன் 31 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் 320 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கீரனூர் பகுதி – 1 திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் 24 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் 264 புதிய அடுக்குமாடி குடியிருப்பு;

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதி – 1 திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் 17 கோடியே 28 லட்சம் செலவில் 192 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அன்னவாசல் பகுதி-2 திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 23 கோடியே 76 லட்சம் செலவில் 216 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கு பேரூர் பகுதி-1 திட்டப்பகுதியில் தரை மற்றும் 6 தளங்களுடன் 11 கோடியே 22 லட்சம் செலவில் 112 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; கடலூர் மாவட்டம், பனங்காட்டு காலனி பகுதி-2 திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 9 கோடியே 76 லட்சம் செலவில் 96 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 453 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,272 குடியிருப்புகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து இன்று திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ரூ.2037.08 கோடியில் கட்டப்பட்ட 19,777 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல்வரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் சுமார் 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ரூ453.67 கோடியில் 4272 அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,Urban Habitat Development Board ,Chennai ,Tamil Nadu Urban Habitat Development Board ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...