×

குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்..!!

சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர்கள் வாழ்த்துப் பெற்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், நவம்பர் 5 அன்று புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலக உணவு திருவிழா நிகழ்ச்சியில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்த செயல் திறனுக்காக இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருதினை, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

நமது நாட்டில், அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக “பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்” 60 சதவீதம் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடனும் மற்றும் 40 சதவீதம் மாநில அரசின் நிதி பங்களிப்புடனும் 2020ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளும் புதிய தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிலை விரிவாக்கம் செய்திடவோ 10 சதவீதம் பங்களிப்பு தொகையுடன் 35 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ.10 இலட்சம் மானியத் தொகையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும், சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினருக்கு விதை மூலதனம் மூலமாக சிறு கருவிகள் வாங்கிட அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்படுகின்றது. பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கிட குழுக்களுக்கு கடன் மானியம் ரூ.3 கோடி வரை வழங்கப்படுகிறது. இக்குழுக்களுக்கு சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக முத்திரைக்காக ஏற்படும் செலவினத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில்முனைவோர் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்திடவும், இத்தகைய தொழில் முனைவோருக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அளித்திடவும், பதப்படுத்துதல், சிப்பம் கட்டுதல், சேமிப்பு மற்றும் ஆய்வக வசதிகளை அனைத்து தனிநபர் மற்றும் குழு நிறுவனங்களும் பயன்படுத்திடவும் தொழில் கற்கும் மையங்கள் உதவுகின்றன.

இதனை நிறுவிட அரசு நிறுனவங்கள் (100 %) மற்றும் தனியார் நிறுவனங்கள் (50%) ஆகியவற்றிக்கு நிதி உதவி அளிக்கப்படுகின்றது. 2020-21 முதல் 2023-24 வரை தமிழ்நாட்டில், தனிநபர் பிரிவின் கீழ், இதுவரை 8.410 நபர்களுக்கு கடன்கள் ஒப்பளிப்பு செய்து ரூ.152.20 கோடி மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2.351 விவசாயிகளும், 4,635 பெண்களும் 777 ஆதிதிராவிடர் (SC) பிரிவினரும் மற்றும் 68 பழங்குடியினர் (ST) பிரிவினரும் மானியத்துடன் கடன்பெற்று தொழில் துவங்கி பயனடைந்துள்ளனர்.

உலகிற்கு இந்திய உணவு பாரம்பரியத்தை அறிமுகம் செய்திடவும் பல்வேறு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவிடும் பொருட்டும் உலக உணவு திருவிழா இவ்வாண்டு நவம்பர் மாதம், 3, 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான நவம்பர் 5 அன்று, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சிறந்த செயல் திறனுக்கான விருது இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் திருமதி. அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திரு.எல்.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

The post குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Tamil Nadu ,Chief Minister K. Ministers ,Stalin ,Chennai ,President of the Republic of ,India ,K. ,K. Ministers ,
× RELATED குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி...