×

10 மசோதாக்கள் விவகாரம், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை; டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் அமித்ஷாவை இன்று நேரில் சந்திக்க திட்டம்?.. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி பயணம்


சென்னை: திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் விவகாரம், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை என பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை இன்று நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில்லை என்றும், அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தங்களை புகுத்துவது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறுவது என தமிழ்நாடு அரசுடன் தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் ரவி மீது குற்றம்சாட்டி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினார். அதில், ‘சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் ஏற்படுத்துகிறார். எனவே, பதவியில் இருந்து நீக்கப்பட தகுதியானவர்’ என்று அதில் முதல்வர் தெரிவித்திருந்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில், ‘தமிழக மக்களின் உரிமைகளை தமிழக ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதிலும் குறுக்கே நிற்கிறார்’ என புகார் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 10ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ‘மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், முடிவை நிறுத்தி வைக்கலாம், திருத்தம் கோரி அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பலாம். எதுவுமே செய்யாமல் கிடப்பில் போட முடியாது’ என தெரிவித்து, விசாரணையை நவ.20ம்தேதியான இன்று தள்ளிவைத்தது. இந்நிலையில், பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடந்த 13ம் தேதி திருப்பி அனுப்பினார். இதையடுத்து, நேற்று முன்தினம் தமிழக சிறப்பு சட்டப் பேரவை கூட்டப்பட்டது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மாலையிலேயே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விஷயத்தில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. சட்டமன்றம் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவற்றுக்கு ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டிய நிலை இருக்கிறது. இதன் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு கடும் குற்றச்சாட்டுக்களை கூறியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சட்ட ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணர்களை அவர் இன்று நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 10 மசோதாக்கள் விவகாரம், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை; டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் அமித்ஷாவை இன்று நேரில் சந்திக்க திட்டம்?.. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Governor ,Amit Shah ,Delhi ,Chennai ,
× RELATED கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக...