×

என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை, நெஞ்சு உடைந்து சிதறியது: இயக்குனர் செல்வராகவன்

சென்னை: நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே இருந்தேன், என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்று, இந்தியா புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அடுத்த 3 இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

இதைத் தொடர்ந்து, மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதிய இந்தியா 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் நேற்று அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 240 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ராகுல் 66 ரன்களும், கோலி 54 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வென்று 6வது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. நிலைத்து நின்று ஆடிய ஹெட் 137 ரன்கள் எடுத்து அசத்தினார்.

தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் பைனலுக்குள் நுழைந்த இந்தியா, துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை உடைந்து நொறுங்க வைத்தது. எதிர்பாராத இந்த தோல்வியால் இந்திய வீரர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து திரைப்பட இயக்குனர் செல்வராகவன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம், அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சு உடைந்து சிதறியது” என தெரிவித்துள்ளார்.

The post என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை, நெஞ்சு உடைந்து சிதறியது: இயக்குனர் செல்வராகவன் appeared first on Dinakaran.

Tags : Selvaraghavan ,CHENNAI ,
× RELATED வைகோ மீதான வழக்கு 4 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு