×

வங்கியில் போலி கையெழுத்திட்டு ரூ.39.15 லட்சம் ஏமாற்றிய தம்பதியர் மீது வழக்கு

மதுரை, நவ. 20: திண்டுக்கல் மாவட்டம், கோம்பைபட்டியை அடுத்த மேலகோவில்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மலர்விழி (48). இவர், மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது: நான் கடந்த, 2014ம் ஆண்டு மதுரை, மதிச்சியத்தில் தங்கியிருந்தபோது எனது, வீட்டின் அருகில் வசித்த விஸ்வநாதன் மற்றும் ஜான்சி ஆகியோர், பிரிண்டிங் பிரஸ் வைக்கபோவதாக கூறி என்னிடம் கேரண்டி கையெழுத்து பெற்று, தல்லாகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.8 லட்சம் கடனாக பெற்றனர்.

அதன்பின் எனக்கு தெரியாமல் எனது, கையெழுத்தை போலியாக போட்டு ரூ.29 லட்சத்தை வங்கியிலிருந்து கடனாக பெற்றுள்ளனர். மேலும் என்னிடமும், எனது சகோதரி ராதிகாவிடமும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 லட்சமும், தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.15 லட்சமும் பெற்றனர். சமீபத்தில் வங்கியில் இருந்து வந்து என்னிடம் வாங்கிய கடன் தொடர்பாக விசாரித்தபோது அவர்கள் செய்த மோசடி தெரியவந்தது.

இதேபோல் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டுக்காக வசூலித்த பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், விஸ்வநாதன், அவரது மனைவி ஜான்சி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வங்கியில் போலி கையெழுத்திட்டு ரூ.39.15 லட்சம் ஏமாற்றிய தம்பதியர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Malarvizhi ,Melakoilpatti Nadutheru ,Kombaipatti, Dindigul district ,Madurai Central ,Dinakaran ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால்...