×

அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் ஆட்சிமொழி கருத்தரங்கம்

 

நாகர்கோவில், நவ.20: குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருவாய் கூட்ட அரங்கத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.

நவம்பர் 30ம் தேதி அன்று மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையைத் தொடர்ந்து பயிலரங்கில் கலைஞர் நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வு, குறைகளைவு நடவடிக்கைகள், கலைஞரின் சமுதாயச் சிந்தனைகள், மொழிப்பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், மொழிப்பயிற்சி, கணினித்தமிழ் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

டிசம்பர் 1ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆட்சிமொழி கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் கனகலட்சுமி செயல்படுவார். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் ஆட்சிமொழி கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : language ,Nagercoil ,Kumari District ,Collector ,Sridhar ,Dinakaran ,
× RELATED பூதப்பாண்டி அருகே 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர்கள் பறிமுதல்