×

வளர்ந்து வரும் பகுதியாக திகழும் வெளிவட்ட சாலையை மேம்படுத்த வரைபடம்: சிஎம்டிஏ நடவடிக்கை

 

சென்னை: சென்னை வெளி வட்ட சாலையின் இருபுறமும் 1 கிமீ நீளத்திற்கு மேம்படுத்துவதற்கான வரைபடத்தை தயாரிக்க, டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை ஆகியவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில், ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம், நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஓ.எம்.ஆர், இசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை, சென்னை பெரிபெரல் ரிங் ரோட்டுடன் இணைக்க, பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.  1.8 கி.மீ நீளம், ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.

இந்த சாலைக்கு சி.பி.ஆர்.ஆர்., என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்ட பணி முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தை குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 62 கி.மீ வெளி வட்ட சாலையின் இருபுறமும் 1 கி.மீ நீளத்திற்கு மேம்படுத்துவதற்கான வரைபடம் தயாரிக்க, டெல்லியை சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) ஒப்பந்தம் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அதிக மாடி இட குறியீடு காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இந்த பகுதியை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே அடுக்குமாடி கட்டிடங்கள் வரும் காலங்களில் வர வாய்ப்புகள் உள்ளன. இதை மனதில் வைத்தே இந்த பகுதியை 1 கி.மீ நீளத்திற்கு மேம்படுத்துவதற்கான வரைபடம் தயாரிக்க ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. புதிய கடைகள், மால்கள், நடைமேடைகள், சுற்றுலா அமைப்புகள் ஆகியவற்றை கொண்டு வரும் விதமாக இந்த அமைப்பை ஏற்படுத்த உள்ளனர்.

இந்த வெளிவட்ட சாலையானது நிலையான வேகமான உயர் வளர்ச்சி பாதையாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறதாம். அதனால் இங்கே வேகமாக முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் மூலம் இந்த பகுதிகள் வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) பணியை மேற்கொள்ள போதுமான நிலம் உள்ளது என்றும் கூறி உள்ளதால், பிரச்னை இன்றி விரைவில் பணிகள் இங்கே தொடங்க உள்ளது.

இதன் மூலம் இசிஆர் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும். மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 3வது பேக்கேஜுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. முகையூர் முதல் மரக்காணம் வரையிலான பகுதிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் இசிஆர் விரிவுபடுத்தும் பணிகள் முடியும். 132 கி.மீ நீளம், 6 வழி அகலம் கொண்ட சி.பி.ஆர்.ஆர் சாலை, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சித்தூர் – தச்சூர் கூட்டு சாலையில் ஆந்திராவை அடைய வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வளர்ந்து வரும் பகுதியாக திகழும் வெளிவட்ட சாலையை மேம்படுத்த வரைபடம்: சிஎம்டிஏ நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CMDA ,CHENNAI ,Chennai Outer Ring Road ,Delhi ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...