×

ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் ரூ.3 கோடியில் பாரா கிளைடிங் தளம் பணி தீவிரம்: சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தமிழ்நாடு அரசு மீண்டும் ஏற்பாடு


தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை விளங்கி வருகிறது. பூமி மட்டத்திலிருந்து 1470 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் எப்போதும் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவுவதால், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் அரசு துறை சார்ந்து சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, படகு துறை, மூலிகை பண்ணை, செயற்கை நீரூற்று, நிலாவூர் படகு துறை, மலைவாழ் மக்களின் குலதெய்வமான கதவநாச்சி அம்மன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை பார்க்கும் இடங்களாக உள்ளது. இது மட்டுமல்லாமல் தனியார் பொழுதுபோக்கு கூடங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருவதால் ஏலகிரி மலை கோலாகலமாக காணப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக்காலத்தில், ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் அருகே பாரா கிளைடிங் துவங்கப்பட்டது. அங்கு போதிய உயரம் இல்லாததால் பறக்கும் போது மரக்கிளையில் சிக்கியது. இதனால் அந்த இடத்தை மாற்றி அத்தனாவூர் அருகே உள்ள வாரக்குட்டை பகுதியில் பாரா கிளைடிங் துவங்கப்பட்டு ஜோலார்பேட்டை பகுதிக்குட்பட்ட கோடியூர் பகுதிக்கு சென்று இறங்கும்படி செயல்பட்டு வந்தது. பின்னர் போதுமான காற்றழுத்த வசதி இல்லாததால் நிறுத்தப்பட்டது. ஆனாலும் மீண்டும் பாரா கிளைடிங் தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதற்கிடையில் ஆட்சி மாற்றத்தால் 10 ஆண்டுஅதிமுக ஆட்சியில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜ் சட்டசபையில், சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த தாவரவியல் பூங்கா மற்றும் பாரா கிளைடிங் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து நிலாவூர் அருகே உள்ள கட்டுக்காடு பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பாரா கிளைடிங் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கான கட்டிடப்பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்ட பின்பு கட்டிடத்தின் உயரப்பகுதியில் இருந்து வானத்தில் பறந்து குருசிலாப்பட்டு பகுதி நோக்கி சென்று வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பல வருட கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மீண்டும் பாரா கிளைடிங் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* சோதனை ஓட்டம்
பாரா கிளைடிங் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். பின்னர் பாரா கிளைடிங் தெரிந்தவர்கள் தனியாக பறப்பதற்கும், இல்லாவிட்டால் பயிற்றுனர் உதவியுடன் பறப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் கோடை விழாவுக்கு முன்பாக பணிகளை முழுமையாக முடித்து பாராகிளைடிங் தொடங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* மீண்டும் கோடை விழா
ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு காரணங்களால் கோடை விழா நடத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு கோடை விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட நிர்வாக காரணங்களால் கோடை விழா தடையானது. வரும் மே மாதம் கோடை விழா நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்ெகாள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஏலகிரி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், தற்போது பாரா கிளைடிங் தொடங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர 90 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என அதிமுக ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு எந்தவித ஆயத்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

தற்போது பல்லக்காடியூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி முடிவடைந்துள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் ஏலகிரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து, சுற்றுலா தலத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், அரசுக்கு வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் ரூ.3 கோடியில் பாரா கிளைடிங் தளம் பணி தீவிரம்: சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தமிழ்நாடு அரசு மீண்டும் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Elagiri ,Tamil Nadu government ,Tamil Nadu ,Elagiri hill ,Jollarpet ,Tirupattur district ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...