ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 22 பேரும் சில மணி நேரங்களில் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டு கரை திரும்பினர். நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15ம் தேதி, ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்கள் ராஜ், பிரான்சிஸ் ஆகியோரின் படகுகளில் 22 மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் மாலை அவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 22 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகி ராயப்பன் தலைமையில் மீனவர் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மீனவர்கள் கைதான விபரத்தை தெரிவித்து அவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். உடனே அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை கடல் தொழில் நீரியல் வளத்துறை உயரதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்க கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் 22 மீனவர்களையும், 2 படகுகளுடன் விடுவிக்க இலங்கை உத்தரவிட்டது. தொடர்ந்து மயிலட்டி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் மயிலட்டி துறைமுகத்திலிருந்து இரண்டு நாட்டுப்படகுகளில் பாம்பன் புறப்பட்டனர். காலை 9 மணிக்கு மேல் பாம்பன் கடற்கரையை வந்தடைந்தனர். தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் வந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
The post இலங்கை கடற்படை சிறை பிடித்த பாம்பன் மீனவர்கள் 22 பேர் சில மணி நேரத்தில் விடுவிப்பு appeared first on Dinakaran.
