×

இன்புளூயன்சா வைரஸ் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் தமிழகத்தில் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் பரவல் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், கடந்த வாரம் முதல் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி, இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது.

சளி, இருமல், காய்ச்சல் காரணமாக அரசு மருத்துமனை மற்றுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை சளி, இருமல் ஆகியவை நீண்ட நாட்கள் நீடிக்கிறது. இன்புளூயன்சா வைரஸ் காரணமாக இந்த சளி, இருமல், காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தொற்று நோய் பிரிவு மூத்த ஆலோசகர் மருத்துவர் விஜயலட்சுமி கூறுகையில்: பருவ மழை காலகட்டத்தில் பொதுவாக வைரஸ் காய்ச்சல் இருக்கும். மழை மற்றும் குளிர்காலத்தில் இன்புளூயன்சா வைரஸ் அதிகமாக இருக்கும்.

3 மாதம் முன்னர் வரை இன்புளூயன்சா வைரஸ், ஆர்.எஸ்.வி வைரஸ், மெட்டாப்நியூமோவைரஸ் உள்ளிட்ட 5 வகையாக வைரஸ் பரவி வந்தது. ஆனால், தற்போது வகை வகையான வைரஸ்கள் பரவி வருகிறது. இந்த வைரஸ்களை பொறுத்த வரையிலும் இளைஞர்களிடையே வந்தால் சளி மற்றும் இருமல் உடன் சென்று விடும். ஆனால் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு, வயதான நபர்களுக்கு, இணை நோய் உள்ளவர்கள் இன்புளூயன்சா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

சில நேரங்களில் இறப்பும் நிகழ்கிறது. இளைஞர்களிடையே இன்புளூயன்சா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு கிட்டத்தட்ட 1 மாதம் இருமல் இருக்கும். இது பொதுவான ஒன்று தான். இது சரியாவதற்கு 2 – 6 வாரம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுவது நல்லது. மேலும் வெளியில் சென்று வரும் நபர்கள் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இன்புளூயன்சாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறை
நல்ல ஊட்டச்சத்து கொண்ட உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து உள்ள பானங்களை அருந்தலாம். நன்றாக தூங்க வேண்டும். கடற்கரை பகுதிகள், குளிர்ந்த காற்று வீசும் பகுதிகள், தூசி நிறைந்த பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது மருத்துவர்களிடம் பரிசோதிக்க வேண்டும்.

The post இன்புளூயன்சா வைரஸ் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் தமிழகத்தில் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Northeast ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...