×

தமிழக அரசின் மின்னல் வேக செயல்பாட்டினால் சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நேற்று மாலையே ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த மின்னல் வேக செயல்பாட்டினால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் இன்று அவசரமாக டெல்லிக்கு செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றம் கூடும்போது பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இப்படி அனுப்பி வைக்கும் மசோதாக்களில் சுமார் 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நாளை(20ம் தேதி ) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னிடம் நீண்டநாட்களாக கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களை அவசர அவசரமாக தமிழக அரசுக்கு கடந்த 13ம் தேதி திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதை தொடர்ந்து, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் 18ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போது,’15வது சட்டமன்ற பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 2 சட்டமுன்வடிவுகள், 16வது சட்டமன்ற பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 8 சட்டமுன்வடிவுகள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நெடுநாட்கள் நிலுவையில் வைத்திருந்து, கடந்த 13ம் தேதி அன்று எவ்வித காரணமும் குறிப்பிடாமல், அனுமதி அளிப்பதை நிறுத்திவைப்பதாக சட்டமுன்வடிவுகளில் குறிப்பிட்டு ஆளுநர் அந்த சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளார்.

காரணம் ஏதும் குறிப்பிடாமல் கவர்னர் அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்து, சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல என இப்பேரவை கருதுகிறது. இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 200-ன் வரம்புரையின் கீழ், இந்த சட்டமுன்வடிவுகள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் அனுமதிக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்கிறது. அதன்படி, சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143ன் கீழ் இப்பேரவை மறு ஆய்வு செய்திட இம்மாமன்றம் தீர்மானிக்கிறது’ என்று கூறினார்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மாலையிலேயே கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தான் கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விஷயத்தில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்பார்க்கவில்லை. சட்டமன்றம் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவற்றுக்கு ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும் என்ற நிலை இருப்பதால் இவ்விஷயத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கலையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென இன்று மாலை 5.15 மணிக்கு அவசரமாக டெல்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தமிழக அரசின் மின்னல் வேக செயல்பாட்டினால் சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : Governor ,R. N. Ravi ,Chennai ,Tamil Nadu Legislature ,M.O. K. ,Stalin ,Tamil Nadu ,Gov. R. N. Ravi ,
× RELATED சனாதன தர்மத்தைக் காக்கவே 192...