×

தமிழக அரசு சார்பில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழக அரசு மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை வார விழா இந்தியா முழுவதும் உள்ள தணிக்கை அலுவலகங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் நவம்பர் 19 முதல் 22 வரை தணிக்கை வார விழா-23 கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தணிக்கை மற்றும் கணக்கு துறை பிரிவின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான சைக்கிள் பேரணி நடைபெற்றது. 25 கிலோமீட்டர் தொலைவிற்கான சைக்கிள் பேரணியில் 120கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டினர். இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
1860ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தணிக்கை துறை சார்பில் இந்த நடைபெற்று வருகிறது. இந்த தினத்தையொட்டி அனைத்து சென்னை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட உள்ளது. காலையில் மிதிவண்டி பயணம் செய்வது நல்லது தான். ஓர் ஆண்டில் உள்ள 8760 மணி நேரத்தில் 500 மணி நேரம் எனக்காக ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முடிவு எடுத்தேன். அதில் இந்த நவம்பரிலேயே 500 மணி நேரத்தை நிறைவு செய்ய போகிறேன். அடுத்த ஆண்டு 4000 கிலோ மீட்டர் ஓட வேண்டும் என்று குறிக்கோள் வைக்க உள்ளேன்.

இந்த காலக்கட்டத்தில் மாரடைப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். தமிழக மாநில அரசும் முதல் முறையாக இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம். அகில உலக மருத்துவ மாநாடு ஜனவரி 3ம் தேதி தமிழகத்தில் நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில், உலகில் உள்ள சிறந்த மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 3 நாட்கள் நடக்க உள்ளது , மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்தியாவில் முதல் சர்வதேச மருத்துவ மாநாடாக இது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழக அரசு சார்பில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Minister ,Subramanian ,Chennai ,Government of Tamil Nadu ,MLA ,Ma. ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...