×

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை பிரதமர் மோடி, ஆஸி. துணை பிரதமர், பிரபலங்கள் 1.20 லட்சம் ரசிகர்கள் கண்டு ரசிப்பு

அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் சாம்பியன் பட்டத்திற்காக அகமதாபாத்தில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 20 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் பைனலில் மோதும் நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மைதானத்தில் சுமார் 1.20 லட்சம் ரசிகர்கள் குவிந்து போட்டியை ரசித்து வருகின்றனர். 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. மும்பையில் நடந்த முதல் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்தையும், கொல்கத்தாவில் நடந்த 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்காவையும் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் பைனலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை பைனலில் 2003ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் சந்திக்கின்றன. அப்போது இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 20 ஆண்டுக்கு பின் மீண்டும் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இறுதிபோட்டியை காண நாடு முழுவதும் இருந்து நேற்றே ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்தனர். இன்றுகாலை 10 மணி முதலே அவர்கள் மைதானத்திற்கு வரத்தொடங்கினர். இப்போட்டியை காண்பதற்காக பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வந்தனர். போட்டி தொடங்கும் முன் பிற்பகல் 1.35 மணி முதல் 1.50 மணி வரை இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் மைதானத்துக்கு மேலே உள்ள வான் பகுதியில் சாகசம் புரிந்தன. உலகக் கோப்பை வரலாற்றில் விமானப்படையின் சாகசம் நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.

முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல பாடகர்களான ஜோனிடா காந்தி, நகாஸ் அஸிஸ், அமித் மிஸ்ரா, ஆகாஷ சிங், துஷார் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டு பாடுகின்றனர். 500 கலைஞர்களின் நடனமும் இடம் பெறுகிறது. 2வது பேட்டிங்கின் போது 2வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையில் 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும், வெற்றி கோப்பையை சாம்பியன் கைகளில் ஏந்தும் போதும் 1,200 டிரோன்கள் கொண்டு வானில் உலகக் கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்க உள்ளனர். இவற்றுடன் வாண வேடிக்கைகளும் அதிர வைக்க காத்திருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் சுமார் 1.20 லட்சம் ரசிகர்கள் குவிந்து போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் கூறுகையில், ‘மைதானத்தின் பாதுகாப்பு பணியில் மொத்தம் 6,000 போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்களில் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் பிரிவை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள், சேடக் கமாண்டோக்களின் இரண்டு குழுக்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் கண்டறிதல் படையின் 10 குழுக்கள் ஈடுபடுத்தப் படும்.

மைதானத்தின் கண்காணிப்புப் பணிக்காக ஆளில்லா விமானங்கள், வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணுசக்தி அச்சுறுத்தல்களில் நிபுணத்துவம் பெற்ற தனிப்படையும் நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சிற்றுண்டிகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படாது. கடந்த செப்டம்பர் 29ம் தேதி, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, உலகக் கோப்பை போட்டியை சீர்குலைப்பதாக மிரட்டியதால் அவனுக்கு எதிராக அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்’ என்றார்.

சோனியா காந்தி வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘உலக கோப்பை போட்டிகளின் போது ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட்ட இந்திய அணி வீரர்களுக்களுக்கு வாழ்த்துக்கள். இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன். உலகக் கோப்பையை இந்தியா வென்ற கடைசி இரண்டு நிகழ்வுகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. முதலில் 1983ல், பின்னர் 2011ல் நடந்தது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். கிரிக்கெட் போட்டி நமது நாட்டை ஒருங்கிணைக்க உழைத்துள்ளது. உலக சாம்பியன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளன. இந்திய அணி வெற்றி பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஜெய் ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை பிரதமர் மோடி, ஆஸி. துணை பிரதமர், பிரபலங்கள் 1.20 லட்சம் ரசிகர்கள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket Final ,PM Modi ,Australia ,Ahmedabad ,DEPUTY ,India ,World Cup Cricket Final Championship ,Aussie ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…