தேனி, நவ. 19: தேனி மாவட்டத்தில் செய்தியாளர்கள் என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். தேனி மாவட்டத்தில் செய்தியாளர்கள் என்ற பெயரில் போலி செய்தியாளர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆகியோரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக புகார் மனுக்கள் வருகின்றன. தேனி மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் தவிர எங்கு பார்த்தாலும் செய்தியாளர்கள் என தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் அலுவலர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாகவும், பல்வேறு கசப்பான சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம்பறிப்பதாகவும் தெரியவருகிறது. அங்கீகரிக்கப்படாத போலி செய்தியாளர்கள் வாட்ஸ்அப் செயலி மற்றும் சமூக வளைதலங்களில் செய்திகளை வெளியிடுவேன் என அரசு அலுவலர்களையும், தனியார் அமைப்பு பிரதிநிதிகளையும் மிரட்டி பணம் பறிப்பதாக தெரிய வருகிறது. எனவே, செய்தியாளர்கள் என்ற பெயரில் போலியான அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு மோசடி செயல்களில் ஈடுபடும் போலி செய்தயாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செய்தியாளர்கள் என்ற பெயரில் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத பிரஸ் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு, போலியான அடையாள அட்டை வைத்துள்ளோர் மீதும் போலீசாரின் மூலம் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், செய்தியாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் உரிய ஆதாரத்துடன் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் தெரிவித்தால் அந்த நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவன பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், போலி செய்தியாளர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகுந்த ஆதாரத்துடன், மாவட்ட கலெக்டர் அலுவலக எண் 94980 42443 என்ற செல்போன் எண்ணுக்கும், மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்திற்கு 94981 01570 என்ற செல்போன் எண்ணிற்கும் வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் குறித்த விபரங்கள் பாதுகாக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
The post செய்தியாளர்கள் பெயரில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.
