×

சிவகங்கை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள் தீவிரம்

சிவகங்கை, நவ.19: மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நடக்க உள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சிவகங்கை மக்களவை தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 354 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. 2ஆயிரத்து 670 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆயிரத்து 936கட்டுப்பாட்டு கருவிகள், 2ஆயிரத்து 88 வாக்குப்பதிவு விவரம் சரிபார்க்கும் இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி கடந்த நில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.

ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலின் போது இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள சின்னம், வேட்பாளர் பெயர் உள்ள தாள்களை அகற்றுதல், பதிவுகளை அழித்தல், பட்டன்களின் செயல்பாடுகளை சரிபார்த்தல், வாக்குகள் பதிவாகிறதா என ஒவ்வொரு இயந்திரமும் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டு தேர்தலுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. பழுதான் இயந்திரங்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 357வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ளன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவைகளிலும் வாக்குச்சாவடிகள் செயல்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின் சப்ளை, மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளம், இடவசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பது குறித்து ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டு அவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையமான காரைக்குடி அழகப்பா கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது:தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிவடைந்துள்ளது. வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளிட்டவைகளை முதற்கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு படிப்படியாக தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post சிவகங்கை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Sivagangai district ,Sivagangai ,Election Commission ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா