×

காரைக்குடி,திருப்புத்தூரில் கந்தசஷ்டி விழா உற்சாகம்

காரைக்குடி, நவ.19: காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயிலில் கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று மாலை அறுமுகச் செவ்வேள் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல். மாலை 4.05 மணிக்கு வெள்ளிரதத்தில் அறுமுகச் செவ்வேள் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து சூரனை தடிதலும் ஆட்கொள்ளலும் (சூரசம்ஹாரம் ) நடந்தது. இன்று 7ம் திருநாளை முன்னிட்டு பகல் 11 மணிக்கு திருமுழுக்காட்டு (மகாபிஷேகம்) மாலை 6.15 முதல் 7 மணிக்குள் தெய்வானை திருமணம், இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் அறுமுகச் செவ்வேள் எழுந்தருளல் நடக்கிறது. சூரசம்ஹாரத்தன்று வெள்ளி ரதத்தில் அறுமுகச் செவ்வேள் எழுந்தருளல், விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில், பாலசுப்பிரமணியர் யானை வாகனம், முத்துக்கந்தர் வெள்ளி மயில்வாகனம், வீரபாகு தேவர் குதிரை வாகனம், தண்டாயுதபாணி கடா வாகனத்திலும் எழுந்தருளல் நடந்தது.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. விழாவில் காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவின் 6ம் நாளான நேற்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் கீழரத வீதி சீரணி அரங்கம் முன்பு நடைபெற்றது. இதில் கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்காரம் நிகழ்வை கண்டு களித்தனர். இன்று பகல் 11.20 மணியளவில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

The post காரைக்குடி,திருப்புத்தூரில் கந்தசஷ்டி விழா உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Gandashashti festival ,Karaikudi, Tiruputhur ,Karaikudi ,Kunrakkudi Shanmuganathan Peruman Temple ,Gandashashti ,
× RELATED கேரள சிறையில் தப்பிய தண்டனை குற்றவாளி பிடிபட்டார்..!!