×

ஜப்பானிய போன்சாய் கல்ச்சர் முறையில் ஆல மரத்தை ஒரு அடியில் வளர்த்து ஆசிரியர் அசத்தல்: மினி சைஸ் மரங்களை கண்டு மக்கள் வியப்பு

திண்டுக்கல், நவ. 19: அரசு பள்ளி ஆசிரியர் ஜப்பானிய தொழில்நுட்ப முறையில் வானுயர்ந்த மரங்களை மினி சைஸில் வீட்டில் வளர்த்து அசத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லியோ. அரசு பள்ளி ஓவிய ஆசிரியர். இளம் வயதிலிருந்தே மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் பள்ளி பருவத்தில் ஜப்பான் நாட்டு போன்சாய் கல்ச்சர் முறையில் முதன்முதலாக இச்சி மரத்தை வளர்த்துள்ளார். தொடர்ந்து மேமி போன்சாய், ஸ்மால் போன்சாய் உள்ளிட்ட மர வகைகளை கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வளர்த்து வருகிறார்.

இவரது தோட்டத்தில் 22 வருடம் வளர்ந்த இச்சி மரம் ஒன்றரை அடி, 20 வருட ஆலமரம் 1 அடி, 20 வருடம் அரசமரம் ஒன்றே கால் அடி, 20 வருடம் காகித பூ செடி (போகன் வில்லா) ஒன்றரை அடி, 16 வருடம் கல் இச்சி மரம் அரை அடி, 8 வருடம் வேப்ப மரம் அரை அடி உயரத்தில் உள்நாட்டு மரங்களை வளர்த்து வருகிறார். மேலும் 20 வருடம் வளர்ந்த ஜூனீபர் மரம் 1 அடி, 18 வருடம் லாங் லீவ்ஸ் பைகஸ் மரம் அரை அடி, 15 வருடம் ஃபைகஸ் மைக்ரோகார்பா மரம் அரை அடி, 6 வருடம் கிறிஸ்துமஸ் மரம் அரை அடி உயரம் என நூற்றுக்கும் மேற்பட்ட அயல்நாட்டு மரங்களையும் வளர்த்து வருகிறார். நாள்தோறும் இவரது தோட்டத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் இம்மரங்களை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் லியோ கூறுகையில், ‘‘எனது வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் போன்சாய் கல்ச்சர் முறையில் பூக்கும் தாவரம், பூக்கா தாவரம் என நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறேன். பொதுவாக, மலைப்பகுதியில் வளரும் மரங்கள் மற்றும் அயல்நாட்டு மரங்களை போன்சாய் கல்ச்சர் முறையில் வளர்ப்பது நமது சீதோஷ்ண நிலைக்கு ஒரு சவாலாகவே இருக்கும். நாள் ஒன்றுக்கு குறைந்தது அரை மணிநேரம் செலவிட்டால்தான் போன்சாய் கல்ச்சர் முறையில் மரங்களை நல்ல முறையில் வளர்க்கலாம்.

பெரிய மரத்திற்கு ஒரு செம்பு தண்ணீரும் சின்ன மரத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீரும் தினந்தோறும் ஊற்றினால் போதும். இத்துடன் மீன் கழிவு, இறைச்சி கழிவு, தண்ணீர் மற்றும் காய்கறி கழிவுகள் சேர்த்தால் இதற்கு போதுமான ஊட்டச்சத்து கிடைத்து விடும். பெரும்பாலானோர் வேப்பமரம் மற்றும் அரச மரங்களை விநாயகர் வைத்து வழிபாடு நடத்துவதற்காக ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்’’ என்றார்.

The post ஜப்பானிய போன்சாய் கல்ச்சர் முறையில் ஆல மரத்தை ஒரு அடியில் வளர்த்து ஆசிரியர் அசத்தல்: மினி சைஸ் மரங்களை கண்டு மக்கள் வியப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...