×

75 சதவீதம் வெளியூர் பஸ்கள் பைபாசில் செல்வதால் அவதிக்குள்ளாகும் பணிகள்

சேலம், நவ.19: சேலம் மணல் மார்கெட்டில் இருந்து தில்லைநகர் பிரிவு ரோடு வரை பாதாள சாக்கடை, சாக்கடை கால்வாய் கட்டும் பணி மெத்தனமாக நடப்பதால், வௌியூர்களில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக வரும் 75 சதவீதம் பஸ்கள் உடையாப்பட்டி பைபாசில் செல்வதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாநகர பகுதியில், கடந்த 2007ம் ஆண்டு பாதாள சாக்கடை பணி தொடங்கப்பட்டது. அப்போதைய ஆட்சியில் இப்பணி விறுவிறுப்பாக நடந்தது. இரண்டு முறை அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை பணி சரிவர நடைபெறவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியில், பாதாள சாக்கடை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணல் மார்க்கெட்டில் இருந்து தில்லைநகர் பிரிவு ரோடு வரை கடந்த 4 மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை பணி தொடங்கப்பட்டது.

இப்பணி தொடங்கிய பின்பு சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆத்தூர், அரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் சுந்தர் லாட்ஜ், மணல் மார்க்கெட், பொன்னம்மாப்பேட்டை வழியாக சென்று வருகிறது. அதே வேளையில் ஆத்தூர், அரூர் மார்க்கமாக வரும் வெளியூர் பஸ்கள் அம்மாப்பேட்டை திருவிக ரோடு வழியாக பட்டைகோயில், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆத்தூர், அரூர் மார்க்கமாக அயோத்தியாப்பட்டணம் வழியாக வரும் வெளியூர் பஸ்கள் உடையாப்பட்டி பைபாஸ் வழியாக செல்கிறது. இதன் காரணமாக அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, மணல் மார்க்கெட், சுந்தர் லாட்ஜ், அரசு மருத்துவமனை, 4 ேராடு உள்ளிட்ட பகுதிகளில் இறங்க வேண்டிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சேலத்தைச் சேர்ந்த பயணிகள் கூறியதாவது: மணல் மார்க்கெட் முதல் தில்லைநகர் பிரிவு ரோடு கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இப்பணி தொடங்கியதில் இருந்தே மெத்தனமாக நடைபெறுகிறது. இப்பணி காரணமாக அயோத்தியாப்பட்டணம் வழியாக அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, மணல் மார்க்கெட், சுந்தர் லாட்ஜ், அரசு மருத்துவமனை, 4 ரோடு வழியாக 75 சதவீதம் பஸ்கள் செல்வதில்லை. இவ்வழியாக வரவேண்டிய பஸ்கள் உடையாப்பட்டி பைபாசில் பயணிகளை இறக்கிவிடப்படுகின்றனர். இப்பகுதிக்கு செல்ல வேண்டிய பயணிகள் அங்கிருந்து ஆட்டோ, டவுன் பஸ் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பகல் நேரத்தில் ஆட்டோ, டவுன் பஸ்கள் கிடைக்கும்.

அதனால் பயணிகள் ஏதாவது வாகனத்தை பிடித்த சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் உடையாப்பட்டி பைபாசில் இறக்கிவிடபடுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மணல் மார்க்கெட் பகுதியில் நடக்கும் பாதாள சாக்கடை, சாக்கடை கால்வாய் பணியை துரிதகதியில் முடிக்க வேண்டும். போக்குவரத்து கழக அதிகாரிகளும் அயோத்தியாப்பட்டணம் வழியாக வரும் வெளியூர் பஸ்கள் உடையாப்பட்டி பைபாசில் இயக்காமல், அம்மாப்பேட்டை வழியாக இயக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.

The post 75 சதவீதம் வெளியூர் பஸ்கள் பைபாசில் செல்வதால் அவதிக்குள்ளாகும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Sandal Market ,Thillainagar Division Road ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை