×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 25 முதல் 27ம் தேதி வரை 2,700 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தகவல்

 

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. வரும் 26ம் தேதி மகாதீப விழா நடைபெற உள்ளது. அதில், தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,700 கார்த்திகை தீப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதற்காக, திருவண்ணாமலையில் 9 தற்காலிக மற்றும் 4 கூடுதல் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அதில், கலெக்டர் பா.முருகேஷ், டிஎஸ்பிக்கள் குணசேகரன், மணிமாறன், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது: தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. அதையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டிருக்கிறோம். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், மாநிலம் முழுவதும் 2,700 சிறப்பு பஸ்கள் 6,832 நடைகள் இயக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதோபோல், பக்தர்கள் வசதிக்காக தனியார் பஸ்களை கூடுதல் நடைகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நடைகள் வேண்டுமானாலும், நேர கட்டுப்பாடு இல்லாமல் தீபத்திருவிழா தினத்தன்று தனியார் பஸ்கள் இயங்கும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதற்கு தேவையான வசதிகளும் செய்துத்தரப்படும். மேலும், 13 இடங்களில் அமையும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கோயில் மற்றும் கிரிவலப்பாதை அருகே வருவதற்கு வசதியாக, சுமார் 149 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 31 மினி பஸ்கள் ரூ.10 கட்டணத்தில் இயக்கப்படும். மேலும், 2800 ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை ஷேர் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்தல் மற்றும் சேவை குறைபாடு சம்பந்தமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 04175-232266 என்ற தொலைபேசி எண் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 25 முதல் 27ம் தேதி வரை 2,700 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Deepatri Festival ,Transport ,Commissioner Shanmugasundaram ,Thiruvannamalai ,Government Transport Corporation ,Tiruvannamalai Deepatri festival ,Commissioner Sanmugasundaram ,
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...