×

கழுகுமலை கோயிலில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கழுகுமலை,நவ.19: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் சுவாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை மற்றும் சுவாமி புறப்பாடு ஆகியவை நடந்து வருகிறது. 5-ம் நாளான நேற்று முன்தினம் தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. 6-ம் நாளான நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, திருவனந்தல், உதயமார்த்தாண்டம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த விரதமிருந்த பக்தர்கள் பாதயாத்திரையாககோயிலுக்கு வந்தனர். பகல் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனையும், அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

மாலை 4 மணிக்கு சுவாமி கழுகாசலமூர்த்தி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்களத்துக்கு புறப்பட்டார். தொடர்ந்து சிங்கமகாசூரன், வானுகோபன், தர்மகோபன் ஆகியோரை தொடர்ந்து சூரபத்மனை, கழுகாசலமூர்த்தி வதம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என கோஷமிட்டனர். இரவு 8 மணிக்கு சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. 21-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.

The post கழுகுமலை கோயிலில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai Temple ,Kalgukumalai ,Kandhashashti festival ,Kalgukasalamurthy ,
× RELATED கழுகுமலையில் சமுதாய நலக்கூட அடிக்கல் நாட்டுவிழா