×

உலக கோபபை கிரிக்கெட் 2023: இறுதி போட்டியில் இன்று இந்தியா – ஆஸி. பலப்பரீட்சை


* தொடக்கம் பிற்பகல்:2.00
* 13 வது உலக கோப்பையில் சாம்பியன் யார்?

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், ஷுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், ஷான் அப்பாட், கேமரான் கிரீன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஆஷ்டன் ஏகார், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா.

அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடரின் பரபரப்பான பைனலில், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா முதல் முறையாக தனித்தே நடத்தும் இந்த தொடர், கடந்த மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. லீக் சுற்றில் மொத்தம் 10 அணிகள் மல்லுக்கட்டின. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. இந்த சுற்றின் முடிவில் ஒரு தோல்வி கூட இல்லாமல் 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்ற இந்தியா முதலிடம் பிடித்தது. தென் ஆப்ரிக்கா (14), ஆஸ்திரேலியா (14), நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின.

டாப் 8 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில், இந்த முறை தகுதிச் சுற்றின் மூலம் வாய்ப்பு பெற்ற முன்னாள் சாம்பியன் இலங்கை, நெதர்லாந்து அணிகள் கடைசி 2 இடங்களை தான் பிடித்தன. எனவே தகுதிச்சுற்றில் விளையாடி வென்றால்தான் அடுத்த உலக கோப்பையில் இந்த அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் டாப் 8 அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அரையிறுதியில் இந்தியா 70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் ஆஸி. 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை போராடி வீழ்த்தி 8வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

அகமதாபாத் மோடி அரங்கில் இன்று நடைபெறும் பைனலில் 3வது முறையாக கோப்பையை வெல்ல இந்தியாவும், 6வது முறையாக கோப்பையை வெல்ல ஆஸி.யும் மல்லுக்கட்டுகின்றன. உலக கோப்பைக்கு முன்னதாகவே இந்தியா வந்துவிட்ட ஆஸி. 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் கடைசி ஆட்டத்தில் இந்தியாவை வென்ற உற்சாகத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. உலக கோப்பையில் விளையாடியது. ஆனால், சென்னையில் நடந்த முதல் ஆட்டத்திலேயே இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்து. அதன் பிறகு 2வது ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவிடம் பெரும் தோல்வியை சந்தித்தது. பின்னர் சுதாரித்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் விளையாடிய ஆஸி. அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளை வசப்படுத்தி பைனலுக்கு முன்னேறி உள்ளனது.

ஆப்கானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்த அந்த அணி மேக்ஸ்வெல் நம்ப முடியாத வகையில் அதிரடியாக இரட்டைச் சதம் விளாசியதால் வெற்றியை வசப்படுத்தியது. கேப்டன் கம்மின்சின் பொறுப்பான ஆட்டமும் இந்த வெற்றிக்கு உதவியது. லீக் சுற்றில் தன்னை வீழ்த்திய தென் ஆப்ரிக்காவை, வழக்கம்போல அரையிறுதியில் போராடி வென்று பைனலுக்கும் தகுதி பெற்றுவிட்டது. ஹெட், வார்னர், ஸ்மித், லபுஷேன், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கம்மின்ஸ் என பலமான பேட்டிங் வரிசையுடன் ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் வேகமும் ஸம்பா, மேக்ஸ்வெல் சுழலும் எதிரணிகளுக்கு சவாலாக உள்ளன. மீண்டும் முழு ஆட்டத்திறனுக்கு திரும்பியுள்ள ஆஸி. 6வது முறையாக சாம்பியனாகும் முனைப்புடன் இன்று இந்தியாவை சந்திக்கிறது.

அதே சமயம், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை வசப்படுத்திய உற்சாகம் + தன்னம்பிக்கையுடன் எத்தகைய சவாலையும் சந்திக்த் தயாராக உள்ளது. லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி, ரன் குவிப்பு மற்றும் விக்கெட் வேட்டையில் நம்பர் 1 உள்பட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ள இந்தியா, சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் 3வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேட்டிங்கில் கோஹ்லி, ரோகித், ஷ்ரேயாஸ், ராகுல், கில், ஜடேஜா ஆகியோர் அதிரடிக்க, பந்துவீச்சில் ஷமி, பும்ரா, குல்தீப், சிராஜ், ஜடேஜா ஆகியோர் புயலடிக்க வைக்கின்றனர்.

அகமதாபாத் ரசிகர்களின் முழுமையான ஆதரவும் இந்தியாவுக்கு கூடுதல் பலமாக இருக்கும். இன்றைய ஆட்டத்தில் வெல்வதன் மூலம் உலக கோப்பையில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் வென்ற 2வது அணியாக இந்தியா சாதனை படைக்கும். ஏற்கனவே இந்த சாதனையை 2 முறை படைத்த ஒரே அணியாக ஆஸி. முன்னிலையில் இருக்கிறது. மொத்தத்தில், சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய பைனல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெவிட்டாத விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்…
* இரு அணிகளும் 150 முறை மோதியுள்ளதில் ஆஸி. 83-57 என முன்னிலை வகிக்கிறது (10 ஆட்டங்கள் கைவிடப்பட்டன).
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 3-2 என முன்னிலையில் உள்ளது.
* வெவ்வேறு அணிகளுடன் விளையாடிய கடைசி 5 ஆட்டங்கள் அனைத்திலும் இரு அணிகளும் வென்றுள்ளன.
* அகமதாபாத்தில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டமே 1984ல் இந்தியா-ஆஸ்திரேலியா இடையில்தான் நடந்தது. அதில் மட்டுமே இந்தியாவை ஆஸி. வீழ்த்தியது. 1986, 2011ல் நடந்த 2 ஆட்டங்களிலும் இந்தியாதான் வென்றுள்ளது.
* அகமதாபாத்தில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆஸி. 4ல் வென்றுள்ளது. 2 முறை ஜிம்பாப்வே அணியையும், தலா ஒரு முறை இந்தியா, இங்கிலாந்தை வென்றுள்ளது. 2 முறை இந்தியாவிடம் தோற்றுள்ளது.
* இந்திய மண்ணில் விளையாடிய 71 போட்டியில் இரு அணிகளும் தலா 33ல் வென்றுள்ளன (5 ஆட்டங்கள் ரத்து).

* இந்தியா இங்கு 19 முறை விளையாடி 11ல் வென்றுள்ளது. மோடி அரங்கமாக பெயர் மாற்றப்பட்ட பிறகு நடந்த 4 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்தியாவே வென்றுள்ளது.
* அகமதாபாத்தில் இதுவரை 30 ஒருநாள் ஆட்டங்கள் நடந்துள்ளன. முதலில் பேட் செய்த அணிகளும், சேஸ் செய்த அணிகளும் தலா 15 முறை வெற்றியை ருசித்துள்ளன.
* ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் இரு அணிகளும் 13 முறை மோதியுள்ளதில் ஆஸி 8-5 என முன்னிலையில் உள்ளது.
* அவற்றில் ஒன்று, 2011 உலக கோப்பை காலிறுதி. அதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த தொடரில் தான் இந்தியா 2வது முறையாக கோப்பையை வசப்படுத்தியது.
* உலக கோப்பை பைனலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் மோதுகின்றன. 2003 பைனலில் ஆஸி. 125 ரன் வித்தியாசத்தில் வென்றது.
* உலக கோப்பை தொடர்களில் இந்த 2 அணிகளும் முதல் முறையாக 3வது உலக கோப்பையில்தான் மோதின. அந்த ஆண்டுதான் இந்தியா முதல்முறையாக கோப்பையை வென்றது (1983).

டாஸ் முக்கியம்!
இன்றைய ஆட்டத்தில் வெற்றியை டாஸ்தான் முடிவு செய்யும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பகல்/இரவு ஆட்டம் என்பதால் இரவில் பனியின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப முதலில் பேட்டிங்கா, ஃபீல்டிங்கா என்பதை முடிவு செய்ய டாஸ் வெல்வது முக்கியம் என்கிறார்கள். ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத இந்தியா 10ல் 5ல்தான் டாஸ் வென்றது. 2 ஆட்டங்களில் தோற்று, 8 ஆட்டங்களில் வென்ற ஆஸி. 4 முறை தான் டாஸ் வென்றது. அகமதாபாத் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தும் டாஸ் முக்கியத்துவம் பெறும்.

பரிசு மழை
13வது உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ₹33.22 கோடி வழங்கப்பட உள்ளது. பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணி ₹16.61 கோடியை பெறும். அரையிறுதியுடன் மூட்டை கட்டிய நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு தலா ₹6.64 கோடி, லீக் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கும் தலா ₹83 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ₹33 லட்சம். மொத்த பரிசுத் தொகை: ₹83.06 கோடி.

* ‘நான் கேப்டனாக பொறுப்பேற்ற நாளில் இருந்தே உலக கோப்பை பைனலில் விளையாடும் இந்த நாளுக்காக காத்திருக்கிறோம். எங்கள் அனைவரது கிரிக்கெட் வாழ்க்கையிலும் இந்த தருணம் மிகப் பெரியது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்காக உலக கோப்பையை வெல்வது எங்கள் கடமை’ என்று இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

* உலக கோப்பை பைனலை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி, ஆஸி. துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமான பிரபலங்கள் வருவதையொட்டி அகமதாபாத்தில் 6000 போலீசார் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* மோடி அரங்கில் ஒரு லட்சத்து, 32 ஆயிரம் இருக்கை வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* போட்டி தொடங்குவதற்கு முன்பாக பிற்பகல் 1.35-1.50 வரை இந்திய விமானப்படையின் சூரியாகிரண் சாகசம், முதல் இன்னிங்ஸ் குளிர்பான இடைவேளையில் பாடகர் ஆதித்யா காத்வி, முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் ப்ரீதம் சக்ரவர்த்தி, ஜோனிடா காந்தி, நகாஷ் அசிஸ், அமித் மிஷ்ரா, அகாசா சிங், துஷார் ஜோஷி இசை மழை, 2வது இன்னிங்ஸ் குளிர்பான இடைவேளையில் லேசர் ஒளி ஜாலம்.

The post உலக கோபபை கிரிக்கெட் 2023: இறுதி போட்டியில் இன்று இந்தியா – ஆஸி. பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : World Angry Cricket 2023 ,India ,Aussie ,Multiexam ,13th World Cup ,Rokit Sharma ,K. L. Rahul ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை