×

துளையிடும் போது பயங்கர சத்தம்; உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீண்டும் மீட்பு பணி நிறுத்தம்: சிக்கியிருப்பது 40 பேர் அல்ல 41 என அறிவிப்பு


உத்தர்காசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியின் போது, பயங்கர சத்தம் கேட்டதால், மீண்டும் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியின் சில்கியாரா பகுதிக்கு அருகே சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்திற்காக அமைக்கப்படும் 4.5 கிமீ தூர சுரங்கப்பாதை பணியின் ஒரு பகுதி கடந்த 12ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏற்பட்ட மண் சரிவில் சுரங்கத்தில் இருந்த 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க சுரங்கத்தின் உள்ளே 60 மீட்டர் தூரத்திற்கு கொட்டிய இடிபாடுகளில் ஆகர் இயந்திரம் 24 மீட்டர் வரை துளையிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் துளையிடும் பணியின் போது சுரங்கத்தின் உள்ளே விரிசலுடன் பயங்கர சத்தம் கேட்டது.

இதனால், மேற்கொண்டு துளையிட்டால் சுரங்கம் மீண்டும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்து துளையிட்டு தொழிலாளர்களை மீட்டு மாற்று ஏற்பாடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கியிருப்பது 40 அல்ல 41 தொழிலாளர்கள் என சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் நேற்று உறுதிபடுத்தி உள்ளது. பீகாரை சேர்ந்த மற்றொரு தொழிலாளியும் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் சிக்கி நேற்றுடன் 7 நாளாகியும் மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.

நம்பிக்கையை இழக்கிறோம்
சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கி ஒருவாரமாகிய நிலையில், அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். அவர்கள் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகளிடம் இருந்து வெறும் வாக்குறுதிகள் மட்டுமே எங்களுக்கு கிடைத்துள்ளன. ஒருவாரமாகி விட்டது. ஒவ்வொரு மணி நேரமும் நாங்கள் பொறுமையையும், நம்பிக்கையையும் இழந்து வருகிறோம். இங்கு மீட்பு பணி எதுவும் நடக்கவில்லை. எங்களின் மனவலிமை பலவீனமடைந்து வருகிறது’’ என்றனர்.

The post துளையிடும் போது பயங்கர சத்தம்; உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீண்டும் மீட்பு பணி நிறுத்தம்: சிக்கியிருப்பது 40 பேர் அல்ல 41 என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Uttarkashi ,Dinakaran ,
× RELATED பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்...