×

தமிழகத்தில் புதிதாக 150 மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 150 மருத்துவமனைகளை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதனையொட்டி மயிலாப்பூர் நொச்சிகுப்பத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
4 வாரங்களாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. கடந்த 3 வாரங்களில் நடைபெற்ற முகாம்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். 1000 மருத்துவ முகாம் என்று அறிவிக்கப்பட்டு 2000 மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம் நடைபெறாத போது 476 நடமாடும் மருத்துவ குழுக்களும், 805 வாகனங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 வாரங்களில் 6 ஆயிரத்துக்கும் மேல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.

சென்னையில் ஒரு மண்டலத்திற்கு 3 முகாம் என்று 45 மருத்துவ முகாம் நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த இது போன்ற மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 10 நாட்களுக்கு முன் ஒன்றிய அரசு, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. ஆனால் தமிழகத்தில் 3 மாதங்களாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனவரி முதல் இன்று வரை டெங்குவால் 6777 பேர் பாதிப்படைந்துள்ளனர். 564பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 52 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த துறை கண்கணித்து வருகிறது. இதனால் டெங்கு கட்டுக்குள் உள்ளது. குளிர் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மற்றும் பரிசோதனை மேற்கொள்ள இந்த மருத்துவ முகாம் பயன்பெறுகிறது. 708 நகர்ப்புற நலவாழ்வு மையம் மையம் திறக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் 500 திறக்கப்பட்டுள்ளது. 140 மையங்கள் சென்னையில் திறக்கப்பட்டது. 4 பணியிடங்களுடன் இந்த நலவாழ்வு மையம் இயங்கி வருகிறது. இது டெங்கு போன்று நோய்களை கட்டுப்படுத்த உதவியாக உள்ளது. மேலும் சென்னையில் 35 மருத்துவமனைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் 120 மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இதற்கு மருத்துவ பணியாளர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இது முடிவடைந்ததும் முதல்வர் கிட்டத்தட்ட 150 மருத்துவமனைகளை தொடங்கி வைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் புதிதாக 150 மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Subramanian ,Chennai ,Minister MLA ,Ma. ,
× RELATED பணிக் காலத்தில் இறந்த அரசு...