×

டீப் ஃபேக் வீடியோ பற்றி சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: டீப் ஃபேக் வீடியோ பற்றி சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா உட்பட சில இந்தி நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட முகங்களுடன் கூடிய போலியான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியது. ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் பீகார் வாலிபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்தது.

இத்தகைய நிகழ்வு குறித்து பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், ஒரு சிறிய தீ சமூகத்தில் மிக பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும்.சமீபத்தில் ஒரு கர்பா நிகழ்ச்சியில் நான் நடனம் ஆடும் வீடியோவை பார்த்தேன்.அந்த வீடியோ எவ்வளவு நன்றாக இருக்கிறது என ஆச்சரியப்பட்டேன். இது போன்ற பல ஆன்லைன் வீடியோக்கள் உள்ளன. டீப் ஃபேக்கின் அச்சுறுத்தல் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இது அனைவருக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம்.

டீப்ஃபேக்குகள் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மற்றும் பாதிப்பு குறித்து மக்களிடம் மீடியாக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நடிகை ராஷ்மிகாவை தொடர்ந்து பாலிவுட் நடிகை கஜோல் டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வேறுறொரு பெண் உடை மாற்றும் வீடியோவில் கஜோல் முகத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி விஷமிகள் டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் நடிகை கஜோல் இருக்கும் வீடியோ ஏஐ தொழில்நுட்பம் மூலம் முகமாற்றம் செய்யப்பட்ட டீப் ஃபேக் என தெரியவந்தது. இத்தகைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதற்கு திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டீப் ஃபேக் வீடியோ பற்றி ஏற்கனவே அனைத்து சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அறிவுறுத்தலின் அடிப்படையில் சமூக வலைதளங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்று விளக்கமளித்தார். மேலும் டீப் ஃபேக் வீடியோ விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்டோரின் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டீப் ஃபேக் வீடியோவால் தானும் பாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார் எனவும் அவர் கூறினார்.

The post டீப் ஃபேக் வீடியோ பற்றி சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Ashwini Vaishnav ,Delhi ,Union ,Dinakaran ,
× RELATED லோகோ பைலட்டும், உதவியாளரும்...