×

தமிழ்நாடு முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானத்துக்கு வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு..!!

சென்னை: தமிழ்நாடு முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானத்துக்கு வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில், அதிமுக ஆட்சியில் 2, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது . ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடசாமி, பா.வேல்துரைக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.  மேலும் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகினறனர்.

ஆளுநர் கடமை தவறிவிட்டார்: வேல்முருகன்

முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது . பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பெயரை கேட்டாலே ஆளுநருக்கு கசக்குகிறது. உச்சநீதிமன்ற கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் ஆளுநர் செயல்படுவதாக வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.

ஆளுநர்களின் செயல்பாடுகளால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: ஈஸ்வரன்

ஆளுநர்களின் செயல்பாடுகளால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வரவேற்பு தெரிவித்துள்ளது . உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய அளவுக்கு ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நாம் எதற்கும் துணிந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் எனும் அம்பை எய்தவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகள் இந்தியாவின் ஜனநாயகத்தை மிக மோசமான நிலைக்கு எடுத்துச் செல்லும்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்கவில்லை: ஜவாஹிருல்லா

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்கவில்லை என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு வைத்துள்ளார். அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் ஆளுநர்கள் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று அண்ணல் அம்பேத்கர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

The post தமிழ்நாடு முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானத்துக்கு வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Velmurugan ,Kongu Iswaran ,Jawahirulla ,Prime Minister of Tamil Nadu ,Chennai ,Prime Minister of ,Tamil Nadu ,Chief Minister ,Welmurugan ,
× RELATED சுகாதார மைய மேற்கூரை சரிந்தது, மூதாட்டி படுகாயம்