சென்னை: ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடசாமி, பா.வேல்துரைக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்.
இந்நிலையில் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார். அவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 11 மசோதாக்களை கடந்த 13-ம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பினார். எவ்வித காரணமும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல. அரசமைப்புச் சட்ட உறுப்பு 200ன் கீழ் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும்.
சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்றார் மாசேதுங் என்று கூறியுள்ளார். காய்ச்சல், தொண்டை வலி காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தாலும், மக்கள் நலன் கருதி பேரவை வந்துள்ளேன். கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் முயற்சி நடப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். கலைஞர் வழியில் நின்று ஆட்சி நடத்தி வருகிறோம், அதற்கு தடை வருமானால் பாரதிதாசன் வழியில் தடைக்கற்களை உடைப்போம். மக்களாட்சி மாண்பை உருவாக்கும் சட்டமன்றமாக முதலில் உருவானது தமிழ்நாடு சட்டமன்றம்தான்.
உடல்நலனைவிட தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம். சமூகநீதி அடிப்படையாகக் கொண்டு அனைத்து மக்கள் நலன் கருதி செயல்படுவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. ஒரு சட்டமன்றம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பது தமிழ்நாடு. இந்திய ஒன்றியத்துக்கே முன்னோடியாக திகழ்ந்தது தமிழ்நாடு சட்டமன்றம். தமிழ்நாடு சட்டமன்றம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க இங்கிலாந்தில் இருந்தெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் வந்து செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.
The post மக்களாட்சி மாண்பை உருவாக்கும் சட்டமன்றமாக முதலில் உருவானது தமிழ்நாடு சட்டமன்றம்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

