×
Saravana Stores

சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் 6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. தற்போது இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 நபர்கள் நேரடியாகவும், 75,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2300 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது. தற்போது, இதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 31,645 நபர்கள் நேரடியாகவும், 1,00,000 நபர்கள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். இப்பகுதியில் சிப்காட் விரிவாக்கம் செய்ய செய்யாறு வட்டத்தில், மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, 1,200 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் ஏதுமில்லை. இந்நிலையில், செய்யாறு வட்டம், மேல்மா கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில். சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் என்பவர் தலைமையில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, கடந்த 4ம் தேதி மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இதில் ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய, அருள் மற்றும் 6 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். நேற்று மாலை, கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருடன் வந்து, பொதுப்பணித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளைச் செய்யமாட்டோம் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குடும்பத்தினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில், மேற்குறிப்பிட்டுள்ள 6 நபர்களின் மேல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் 6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,Siyyar Chipgat Industrial Park ,Industrial ,Dinakaran ,
× RELATED எதை பற்றியும் கவலைப்படாமல்...