×

தமிழகத்தில் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை வெளியிட்டு, வலைதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த மாநாடு தற்போது நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் மாநில அரசு நடத்தும் சர்வதேச மாநாடாக இது இருக்கும். இந்த மாநாடு எதிர்காலத்தில் பரவும் நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் பணிபுரிகின்ற 20,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பயனடைய இருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கான கையேடு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் அதற்கான வலைத்தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், 2222 கிராம சுகாதார செவிலியர்களை நியமிக்கும் பணி வருகிறது.

எல்லா வழக்குகளுக்குமான தீர்ப்பு நேற்று மாலை வந்துவிட்டது. துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. விரைவில், பணி நியமனங்கள் முறைப்படுத்தும் பணியை மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நேற்று இரவே தொடங்கி விட்டார்கள். ஒருமாத காலத்திற்குள் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என ஏறத்தாழ சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சரால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி, தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநர் கோவிந்தராவ், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* உடலுறுப்பு தானம் செய்ய இணையத்தில் 2890 பேர் பதிவு
சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்தினால் மூளைச்சாவு அடைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அராஜகன் கலியமூர்த்தி (26) என்கிற இளைஞரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘முதல்வரின் அறிவிப்பிற்கு பிறகு உடலுறுப்பு தானம் செய்ய இணையதளம் வழியாக முன்வந்து உள்ளவர்களின் எண்ணிக்கை 2890 பேர்’’ என்றார்.

The post தமிழகத்தில் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subramanian ,Chennai ,Minister of Medicine ,Public Welfare ,Subramanian ,Chief Secretariat ,Artist Century Multinational Medical ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...