×

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 23ம் தேதி உண்ணாவிரதம்: நலச்சங்கம் அறிவிப்பு

சென்னை: வரும் 23ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித் தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடுக்கும் அரசாணை எண்.149ஐ நீக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையிலும், வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர்.

இதுபற்றி ஆலோசித்து முடிவெடுப்பதாக அமைச்சர் கூறிய நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தி விரைவில் அரசாணை வெளியிடக்கோரியும், அரசாணை எண்.149ஐ நீக்கக் கோரியும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற 23ம் தேதி (வியாழக்கிழமை) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

The post இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 23ம் தேதி உண்ணாவிரதம்: நலச்சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nala Sangha ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...