×

‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்து புத்தக ஆசிரியர் வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வில் 22ல் விசாரணை

சென்னை: மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம், ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களை கொண்டதாக இருப்பதாக கூறி, இந்த புத்தகத்துக்கு தடை விதித்து கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த புத்தகங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த தடையை எதிர்த்து புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணை வந்தபோது, மனுதாரர் சார்பில், ஏற்கனவே 2000 புத்தகங்கள் விற்பனையாகி விட்டது என்றும், ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு தடை விதிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. அப்போது, இந்த புத்தகத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாகவும், அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பின் இந்த ஆட்சேபத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைப்பதற்காக வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், சி.விகார்த்திகேயன், தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ரிட் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்புகளுடன் விளக்கமளிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்து புத்தக ஆசிரியர் வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வில் 22ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chiddy Rayappan ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...