- வெளியுறவு அமைச்சகம்
- ஐகோர்ட் கிளை
- ராபர்ட் பயாஸ்
- மதுரை
- IC நீதிமன்ற கிளை
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு
மதுரை: அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பயாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 10.6.1991ல் கைது செய்யப்பட்டேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சுமார் 32 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். கடந்த 11.11.2022ல் என்னை உச்சநீதிமன்றம் விடுவித்தது. அப்போது முதல் திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். அறையை விட்டு வெளியில் வரவும், மற்றவர்களுடன் பழகவும் அனுமதிப்பதில்லை. சிறப்பு முகாமில் இருந்து விடுவிப்பதற்கு பதிலாக என்னை இலங்கைக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளனர்.
இலங்கைக்கு நாடு கடத்தினால் நான் நிச்சயம் கொல்லப்படுவேன். என் குடும்பத்தினர் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். நான் எஞ்சிய காலத்தை அவர்களுடன் சுதந்திரமாக வசிக்க விரும்புகிறேன். எனவே, என்னை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்குமாறும், நெதர்லாந்து செல்வதற்காக தூதரக அதிகாரிகள் முன் ஆஜராக அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதேபோல் சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமாரும், தன்னை முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ராபர்ட் பயாசின் மனுவில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.27க்கும், ஜெயக்குமாரின் மனு மீதான விசாரணையை நவ.21க்கும் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
The post சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வழக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்: ராபர்ட் பயாஸ் தாக்கல் செய்த மனுவில் ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.