×

பாஜ, காங்கிரஸ் இடையே கடும் பலப்பரீட்சை ம.பி.யில் 74%, சட்டீஸ்கரில் 70% வாக்குப்பதிவு: பல இடங்களில் வன்முறை, மோதல்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும், ம.பியில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் ம.பியில் 74 சதவீத வாக்குகளும், சட்டீஸ்கரில் 70.45 சதவீத வாக்குகளும் பதிவானது. வாக்குப்பதிவின்போது பல இடங்களில் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. சட்டீஸ்கரில் நக்சலைட் குண்டு வெடிப்பில் துணை ராணுவ வீரர் பலியானார். பா.ஜ ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. நக்சல் பாதிக்கப்பட்ட பாலாகாட், மாண்ட்லா, திண்டோரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் மட்டும் பிற்பகல் 3 மணியோடு வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது. மத்திய பிரதேச மாநிலம் புத்னி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின்னர் அங்கு அனைவரும் வாக்களித்தனர்.

இதே போல் முன்னாள் முதல்வர் கமல்நாத் அவரது குடும்பத்துடன் வாக்களித்தார். ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், ஜோதிராதித்யா சிந்தியா, பிரகலாத் பட்டேல், பா.ஜ மாநில தலைவர் விடி சர்மா, பா.ஜ பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியாவும் வாக்களித்தனர். மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, விளையாட்டுத்துறை அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியா, தொழில்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் தாடிகான் உள்ளிட்டோரும் வரிசையில் நின்று காலையிலேயே வாக்களித்தனர்.

மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங், அவரது மகனும், ரகோகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஜெய்வர்தன்சிங் ஆகியோர் குடும்பத்துடன் வாக்களித்தனர். முன்னாள் அமைச்சர் அஜய்சிங் சர்ஹாட் தொகுதியில் வாக்களித்தார். இதே போல் மாநிலம் முழுவதும் உள்ள 64,629 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி மபியில் உள்ள 230 தொகுதிகளிலும் மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மபியில் பல இடங்களில் காங்கிரஸ் ஆதரவாளர்களை குறிவைத்து தாக்குதல் நடந்தது. திமானி தொகுதியில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் மிர்தன் கிராமத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இதில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதை போலீசார் மறுத்தனர். இதே போல் ராஜ்நாகர் தொகுதியில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம்சிங் உதவியாளர் சல்மான் இதில் பலியானார். இதில் பா.ஜ வேட்பாளர் அரவிந்த் பட்டாரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்டம் மாவ் பகுதியில் நடந்த மோதலிலும் 5 பேர் காயம் அடைந்தனர். ஜாபுவா தொகுதியில் நடந்த கல்வீச்சில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் விக்ராந்த் பவுரியா காவலர் காயம் அடைந்தார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 7ம் தேதி, நக்சல் தீவிரவாத பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புடன் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். கரியாபண்ட் மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய குண்டுவெடிப்பில் இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த (ஐடிபிபி) ஏட்டு ஜோகிந்தர் சிங் பலியானார்.

சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது தொகுதியான படான் துர்க் மாவட்டத்தில் உள்ள குருதி கிராமத்தில் வாக்களித்தார். ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன் மற்றும் அவரது மனைவி ராய்ப்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் வாக்களித்தார். லோர்மி தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜ தலைவரும் எம்பியுமான அருண் சாவோ பிலாஸ்பூர் தொகுதியில் வாக்களித்தார். பாரத்பூர்-சோன்ஹாட் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் ரேணுகா சிங், சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிரேம்நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு முடிவில் சட்டீஸ்கரில் 70.45 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

* ராஜஸ்தான் நவ.25; தெலங்கானா நவ.30
5 மாநில தேர்தலில் மிசோரமில் ஒரே கட்டமாக கடந்த 7ம் தேதி வாக்குப்பதிவு முடிவுற்றது. ம.பி, சட்டீஸ்கரில் நேற்றுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து 3 மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்தது. வரும் 25ம் தேதி ராஜஸ்தானிலும், 30ம் தேதி தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த இரு மாநில தேர்தல்கள் முடிவுற்றதும் வருகிற டிச 3ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.

* சட்டீஸ்கரில் 2 பேர் பலி
சட்டீஸ்கரில் கஸ்டோல் தொகுதியில் ஓட்டுப்போட வரிசையில் நின்ற சகோதரா பாய் நிஷ்கத் என்ற 58 வயது பெண் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதே போல் கொரியா வனப் பிரிவுக்குட்பட்ட மங்கோரா கிராமத்திற்கு அருகே உமேந்திர சிங் (25) என்பவர் யானையால் மிதித்து கொல்லப்பட்டார். அவர் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை தாக்கி பலியானார்.

சட்டீஸ்கர்
22 மாவட்டங்கள்
70 தொகுதிகள்
958 வேட்பாளர்கள்
1,63,14,479 வாக்காளர்கள்
18,833 வாக்குச்சாவடிகள்

மத்தியபிரதேசம்
230 தொகுதிகள்
2533 வேட்பாளர்கள்
5,60,58,521 வாக்காளர்கள்
64,626 வாக்குச்சாவடிகள்

* பணம், மது சப்ளை செய்யும் பா.ஜ கமல்நாத் குற்றச்சாட்டு
மபியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானம் விநியோகித்ததாக பா.ஜ மீது காங்கிரஸ் தலைவர் கமல்நாத் குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ பாஜவிடம் காவல்துறை, பணம் மற்றும் அதிகாரம் உள்ளது. அவர்கள் பணம் மற்றும் மதுபானம் விநியோகம் செய்தனர். எனக்கு பல வீடியோக்கள் கிடைத்துள்ளன. உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தேர்தலில் பாஜவைத் தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெற்றால், பாகிஸ்தானில் கொண்டாட்டங்கள் இருக்கும். தேசத்துக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் பா.ஜவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறர். பாகிஸ்தானைப் பற்றி பேசுவதற்கு முன் அமைச்சர் மிஸ்ரா தேர்தலில் வெற்றி பெறுகிறாரா என்பதை முதலில் பார்க்க வேண்டும்’ என்றார்.

* மபி முதல்வர் போட்டியில் நான் இல்லை
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். குவாலியரில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டு போட்ட பிறகு அவர் கூறும்போது,’நான் முதல்வர் போட்டியில் இல்லை என்று முன்பே உங்களிடம் (ஊடகங்கள்) கூறியுள்ளேன். இதற்கு முன்பும், இன்றும் நான் இந்த போட்டியில் இல்லை. 2013, 2018 மற்றும் இப்போதும் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டீர்கள், நானும் இதையே சொன்னேன்’ என்றார்.

The post பாஜ, காங்கிரஸ் இடையே கடும் பலப்பரீட்சை ம.பி.யில் 74%, சட்டீஸ்கரில் 70% வாக்குப்பதிவு: பல இடங்களில் வன்முறை, மோதல் appeared first on Dinakaran.

Tags : Baha ,Congress ,Chhattisgarh ,New Delhi ,M. ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!