×

காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டினால் சொந்த கட்சிக்குள் கட்டம் கட்டப்படும் கனடா பிரதமர்: ராஜினாமா செய்ய போர்க்கொடி 2025 வரை பதவியில் நீடிக்க முடியுமா?

கனடாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி, காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டினால் ஏற்பட்டுள்ள உள்கட்சி சிக்கல் ஆகியவற்றால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொந்த கட்சிக்குள் கட்டம் கட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார். அடுத்த தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் வரும் 2025ம் ஆண்டு வரை, தனது 10 ஆண்டு கால பிரதமர் பதவியை ட்ரூடோ தக்க வைத்து கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஒன்றிய அரசினால் கடந்த 2020ம் ஆண்டு தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு, கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் அங்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் கடந்த ஜூன் 18ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இந்தியா மீது குற்றம் சாட்டினார். ஆனால் தற்போது வரை இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் தற்காலிக விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.

இந்தியா விசா வழங்கும் பணிகளை சில காலம் நிறுத்தியது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படியும் கனடா அரசை கேட்டுக் கொண்டது. இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் இந்திய அதிகாரிகளின் தகவல் தொடர்பு மூலமாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘ஐந்து கண்கள்’ புலனாய்வு கூட்டமைப்பின் உள்ளீடுகளின் அடிப்படையிலுமானது என்று கனடா தெரிவித்தது.

இதனால்தான், கனடாவின் குற்றச்சாட்டு பற்றிய விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சிறப்பு விலக்கு எதுவும் அளிக்கப்படாது என்றும் தெரிவித்திருந்தார். கனடாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் இந்தியா, கனடாவில் உள்ள இந்தியாவை சேர்ந்த இந்துக்களுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வபோது இந்திய தூதரகங்களை தாக்கும் அவர்களது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும்படியும் கனடா அரசை வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், ஒன்டோரியாவில் உள்ள பிராம்டன் மற்றும் மிசிசவுகா நகரங்களில் வசிக்கும் இந்துக்கள் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது, அங்கு காலிஸ்தான் கொடிகளுடன் கும்பலாக சென்ற தீவிரவாதிகள் அவர்கள் வழிபட விடாமல் கற்களை வீசி விரட்டி அடித்து தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது போன்ற பிரிவினைவாத செயல்களுக்கு கனடா அரசில் இடமில்லை என்று பிரதமர் ட்ரூடோ கூறி வந்தாலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்கள் கனடா அரசு தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன.

கனடாவில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.82 கோடி பேர் வசிக்கின்றனர். இதில், 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் சீக்கியர்களாவர். இவர்கள் அந்நாட்டின் தொழில், வர்த்தகம் மற்றும் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 19 இந்திய வம்சாவளியினரில், 15 பேர் ட்ரூடோவின் லிபரல் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களில் 4 சீக்கியர்கள் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நான்கு முக்கிய துறைகளின் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியை நடத்தி செல்ல இவர்களின் தயவு தேவை என்பதால் ஜஸ்டின் ட்ரூடோ கண்மூடித்தனமாக காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அவரது சொந்த கட்சிக்குள்ளும் மக்களிடையேயும் தீயாக பரவி உள்ளது.

மேற்கூறிய காரணங்களால் மட்டுமின்றி, சமீப காலமாக கனடாவில் வீட்டு வாடகை செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதாலும் பணவீக்கம் குறைவதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பதாலும், வழக்கம் போல் நடக்கும் உள்கட்சி தேர்தலில் ட்ரூடோவின் செல்வாக்கு ஒவ்வொரு முறையும் அதிரடியாக சரிந்து வருகிறது. இதன் இறுதி கட்டமாக, கடைசியாக நடந்த கட்சி தேர்தலில் அவர் கட்சியில் நீடித்தால் அடுத்த தேர்தலில் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் சூழல் இருப்பதாகவும் அதனால் பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகும்படியும் சொந்த கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்த துவங்கியுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் ட்ரூடோ, 2025ம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க முடியுமா? என்பது கேள்வி குறியாகி உள்ளது. இதனால், சொந்த கட்சியினால் அவர் கட்டம் கட்டப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரம், கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பியர் பொலியவிரா 10 முதல் 15 புள்ளிகள் வரை ட்ரூடோவை விட முன்னோக்கி செல்வதை கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால், ட்ரூடோ இல்லாமல் வேறு யாரேனும் பிரதமர் பதவியில் போட்டியிட்டாலும் கூட லிபரல் கட்சி கனடாவில் ஆட்சியை பிடிக்காது என்பது உறுதியாகி உள்ளது.

* ஆதாரம் எங்கே? கேட்கிறார் ஜெய்சங்கர்
ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், நிஜார் கொலை தொடர்பாக இந்தியா மீதான கனடா அரசின் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை நாங்கள் நிராகரிக்கவில்லை. அந்நாட்டு அரசிடம் இருந்து ஆதாரங்களை தரும்படி இந்தியா தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால், ஆதாரம் வந்தபாடில்லை என்றார்.

* கனடா அரசு தீபாவளி கொண்டாட்டத்தை நினைவு கூரும் வகையில், தீபாவளி பண்டிகை தபால் தலையை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்பு, கடந்த 2017, 2020, 2021, 2022 என 4 முறை தீபாவளி தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 5வது முறையாக இந்தாண்டு மாவிழைகள் வடிவமைக்கப்பட்ட தீபாவளி தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த தபால்தலை ரெனா சென் மூலம் வரையப்பட்டு, கிறிஸ்டின் டூவால் வடிவமைக்கப்பட்டது. இதன் 6 தபால்தலை கொண்ட சிறப்பு புத்தகம் ரூ.340க்கு விற்கப்படுகிறது. இப்படி மத நல்லிணக்கம் பாராட்டும் கனடாவில்தான் இந்துக்கள் மீது சீக்கியர் தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது.

The post காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டினால் சொந்த கட்சிக்குள் கட்டம் கட்டப்படும் கனடா பிரதமர்: ராஜினாமா செய்ய போர்க்கொடி 2025 வரை பதவியில் நீடிக்க முடியுமா? appeared first on Dinakaran.

Tags : Canada ,Justin ,Dinakaran ,
× RELATED கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு