×

மக்களை ஒன்றிணைக்கும் அன்டைட்டில் கிச்சன்

நன்றி குங்குமம் தோழி

நம்ம ஊரிலே சமத்துவ பொங்கல், சமத்துவ கொண்டாட்டம் என நிறைய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதே போல மற்ற இடங்களிலும் எல்லோரும் எந்தவித பாகுபாடின்றி உணவுகளை சமைத்து அனைவரும் கூடி உணவு உண்ணும் நிகழ்வுகள் தொடர ஆரம்பித்தது. அவ்வாறு நிகழும் விழாக்களில் இவர்கள்தான் சமைக்க வேண்டும், இவர்கள் சமைக்கக்கூடாது என எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம் என ஓப்பன் கிச்சன் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்துள்ளார் கேரளாவை சார்ந்த விபின்.

‘‘நான் எதையுமே படித்து கற்றுக் கொள்ளவில்லை. அனைத்தையும் சுயமாகத்தான் பயின்றேன். எனக்கு படிப்பு மேல் பெரிய நாட்டம் இல்லை என்பதால், பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்டேன். எனக்கு கலை சார்ந்து ஓவியங்கள் வரைவது மேல் ஆர்வம் அதிகம் உண்டு. கேரளாவில் ஒரு ஆர்ட் கிளப்பில் வேலைக்கு சேர்ந்தேன். 2018ல் நான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிக்காக அந்த ஆர்ட் கிளப் மூலமாக வைத்தோம். கண்காட்சியினை பார்க்க வரும் மக்கள் ஓவியங்கள் மேல் ஒரு பக்கம் ஈர்க்கப்பட்டாலும், அவர்களை அதிகமாக ஈர்த்தது, எங்களின் அன்டைட்டில் கிச்சன்’’ என்றவர் இதற்கான யோசனை எப்படி வந்தது என்பதனையும் விளக்குகிறார்.

‘‘முதன் முதலில் கொச்சியில் பினாலே என்ற இடத்தில்தான் இந்த கிச்சன் அமைப்பினை அறிமுகப்படுத்தினோம். பிறகு எங்கு எல்லாம் எங்களின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் நாங்க எங்களின் கிச்சனையும் கொண்டு வந்தோம், அப்படித்தான் சென்னையில் வானம் நிகழ்ச்சியின் போது எங்களோடு நிறைய பேர் ஆண், பெண் என எந்தவித பேதமின்றி இந்த கிச்சனில் சமைத்து சாப்பிட்டாங்க. இங்கு நம் வீட்டில் அம்மா, பாட்டி சமைக்கும் சமையல் மாதிரி எல்லாம் இருக்காது. சாதாரண பேச்சிலர் சமையல் எப்படி இருக்குமோ அதுபோல்தான் இருக்கும். எங்கள் கிச்சனில் உள்ள பொருட்களை வைத்து என்ன சமைக்க முடியுமோ, அவர்களுக்கு தெரிந்த வகையில் சமைப்பாங்க.

அன்டைட்டில் கிச்சன் என்பது சமையலில் ஒரு கலவை என்றுதான் சொல்லணும். நான் இதை 2018ல்தான் துவங்கினேன். என் கிச்சன் அமைந்த இடத்தில் நான் வரைந்த என் ஓவியங்கள் மற்றும் கலை வேலைப்பாடுகள் இடம் பெற்று இருக்கும். கேரளாவில் ஐயப்பன் என ஒரு நபர் இருந்தார். 1970களில் வாழ்ந்தவர்கள் அனைவருக்கும் அவரை தெரியும். அவர் “மித்ர போஜனம்” எனும் ஒரு முறையை அறிமுகம் செய்தார். அதை பின்பற்றிதான் நானும் இந்த அன்டைட்டில் கிச்சனை கொண்டு வந்தேன். கொச்சியில் பினாலேவில் நான் வேலை செய்யும் போது அங்கு இருக்கும் மக்களுடைய வீட்டுக்கே போய் அவர்களுடைய படங்களை வரைவேன். அப்போது அவங்க கொடுக்கும் உணவைதான் சாப்பிடுவேன். இது எல்லாம் சேர்ந்து தான் எனக்கு யோசனை வந்தது. இந்த கிச்சன் இரவு வரை செயல்படும். அங்கு வரும் அனைவரும் ஒன்றாக சமையல் செய்வாங்க.

பொதுவா நாம வெளியூரில் வேலைக்கு செல்லும் போது நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருப்போம். அங்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு இரவு நேர உணவினை அனைவரும் சேர்ந்து சமைப்போம். அதேபோல, நம்முடைய வீட்டிற்கு நண்பர்கள் வரும் போதும் எல்லோரும் சேர்ந்து சமைப்போம். அப்படி சமைக்கும் போது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். அரசியல், நாட்டு நடப்பு மட்டுமில்லாமல், தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய பிளாட்பார்மாக மாறும் அந்த சமையல் நேரம்.

சில சமயம் நண்பர்கள் சிக்கலில் இருக்கும் போது, அந்த நேரம் மற்றவர்கள் யோசனை தருவார்கள். ஆனால் என்னுடைய அன்டைட்டில் கிச்சனில் நண்பர்கள் மட்டும் இல்லாமல், நமக்கு தெரியாத பலரும் கலந்து கொண்டு ஒருவருடன் ஒருவர் சேர்ந்து உரையாடல் நடத்துவாங்க. அப்படித்தான் எங்களின் கண்காட்சி நடைபெறும் இடங்களில் எல்லாம் கிச்சனும் செயல்பட ஆரம்பித்தது. அதற்கு காரணம் மக்களிடம் ஒரு ஆர்வத்தை இந்த கிச்சன் தூண்டும். கண்காட்சிக்கு வருபவர்கள் கிச்சனில் என்ன சத்தம் என்று எட்டிப் பார்ப்பார்கள். அங்கு அனைவரும் சேர்ந்து சமைப்பதைப் பார்த்து அவர்களுக்கும் சமைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

மற்றவர்களுடன் கை கோர்ப்பார்கள். அவ்வாறு இணையும் போது எதற்காக வந்தோம் என மறந்து முன்பின் தெரியாதவர்களுடன் நண்பர்களாக பழகி அவர்களுடன் இணைந்து செயல்படுவார். இதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் மேல் அன்பு வெளிப்படும். எல்லாவற்றையும் விட அவர்கள் சமைப்பதை மற்றவர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரிந்து கொண்டு உணவினை சுவாரஸ்யமாக சமைப்பார்கள்.

எல்லோருக்கும் சமைக்குறதும், சாப்பிடுறதும் பிடிச்ச விஷயம் இல்லையா..? அதை யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. கேரளா, தமிழ்நாடு பொறுத்தவரை எங்க அன்டைட்டில் கிச்சனில் உணவுகளை சமைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அகமதாபாத்தில் என்ன உணவுகள் சமைப்பது என்பதே ஒரு சவாலாக இருந்தது. காரணம், அங்கு சிலர் சைவம் சமைப்பாங்க. ஒரு சில பகுதியில் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவாங்க. அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் யார் வேண்டும் என்றாலும் உள்ளே வரலாம், சமைக்கலாம் என்பதால், அவர்களுக்கு பிடித்த உணவினை சமைத்து பரிமாறினார்கள். சிலர் அவங்க நடத்தும் கண்காட்சிக்கு எங்களின் கிச்சன் அமைப்பினை மட்டும் ெகாண்டு வரச்சொல்லி கேட்பார்கள்’’ என்றவர் அன்டைட்டில் கிச்சன் என பெயர் வைத்ததற்கான காரணத்தை விளக்கினார்.

‘‘ஒரு ஓவியம் வரையும் போதே அதற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்திடுவோம். அவ்வாறு பெயர் வைக்க முடியாத படங்களை அன்டைட்டில் என்று குறிப்பிடுவோம். முதலில் சகோதரர் கிச்சன் என்றுதான் பெயர் வைத்திருந்தோம். பிறகுதான் அன்டைட்டில் கிச்சன் என மாற்றி அதனை ஓப்பன் கிச்சனாக அறிமுகப்படுத்தினோம். இது சாதாரண ஹோட்டல் மாதிரியோ அல்லது ரெஸ்டாரன்ட் மாதிரியோ கிடையாது. முழுதும் திறந்த அமைப்பில் நடைபெறும் கிச்சன்.

அதனால் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த கிச்சனை செயல்படுத்த முடியும். நான் கண்காட்சிக்கு போகும் போது என் நண்பர்களுக்கு விடுமுறை என்றால் அவங்களும் உடன் வருவாங்க. அப்போது அங்கு கிச்சனிலும் அவங்க முக்கியமா பங்கு பெறுவாங்க. இது என்னுடைய தனிப்பட்ட முயற்சி கிடையாது. என் நண்பர்களின் பங்கும் அதிகம் உண்டு. இதில் ஒரு சிலர் என் கிச்சன் மூலம் நண்பர்களானவர்கள். அதில் ஒரு சிலர் எங்கெல்லாம் நாங்க கிச்சன் அமைக்கிறோமோ அங்கு கண்டிப்பாக தங்களின் வருகையை பதிவு செய்திடுவார்கள்’’ என்றார் விபின்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post மக்களை ஒன்றிணைக்கும் அன்டைட்டில் கிச்சன் appeared first on Dinakaran.

Tags : Untitled ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...