×

கீரையில் 120 வெரைட்டி உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

தனித்துவமான யோசனைகள் எப்போதுமே வெற்றி பெறும். அதிலும் முக்கியமாக உணவுப் பொருட்கள் விஷயத்தில் வித்தியாசமான உணவுகளாக இருந்தால்தான் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியும். அந்த வரிசையில் முருங்கை கீரையை கொண்டு பல வித்தியாசமான இன்ஸ்டன்ட் மாவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த சங்கரலிங்கம். இவர் முருங்கை கீரையை பொடியாக செய்து அதனை மற்ற மாவுப் பொருட்களுடன் கலந்து விற்பனை செய்கிறார். ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும் விதமாக இந்த ஒரு யோசனை தோன்றவே உணவுப் பொருட்கள் எல்லாமே இவரே பார்த்து கண்டுபிடித்து புது வகையான உணவுகளை சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

‘‘எனக்கு சொந்த ஊரு மதுரை. என்னுடைய அப்பா பொதுச்சேவை துறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கும் அதே துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற யோசனை இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்ததும் அடுத்து கல்லூரி படிப்பில் எனக்கு விவசாயம் சார்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் என்னுடைய வீட்டில் என்னை பொறியியல் துறையில் படிப்பதற்கு சேர்த்து விட்டனர். ஆனாலும் நான் விவசாயம் சார்ந்து ஆய்வுகளையும் படித்து தெரிந்து கொண்டுதான் இருந்தேன்.

நான் 2ம் ஆண்டு படிக்கும் போது ஒரு நாள் ​​ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான ஒரு செய்தியை பார்த்தேன். அதில் ரத்த சோகையால் குழந்தைகள் இறப்பு பற்றிய ஒரு ஆய்வறிக்கை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கு நம்முடைய உணவில் மாற்றம் கொண்டு வந்தால் போதும் என்று தோன்றியது. இது சம்பந்தமாக நான் படித்து இருந்தேன். ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்ய கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால் போதும் என பல மருத்துவர்களும் பரிந்துரைத்து வருகிறார்கள். ஆனால் கீரைகளை தொடர்ந்து சாப்பிட முடியுமா என்ற கேள்விதான் மக்கள் மனதில் இருந்து வருகிறது. மேலும் கீரை என்றால் அதை உணவாக பார்க்காமல், பல குழந்தைகள் அதனை மருந்தாகத்தான் பார்க்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் ஊட்டச்சத்துள்ள பொருட்களை உற்பத்தி செய்யாமல்தான் இருந்தது. இதனால் நான் ஏன் இந்த தொழிலில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அது குறித்து சில ஆய்வுகளை மேற் கொள்ள துவங்கினேன். முதலில் நான் ஒரு நிறுவனம் தொடங்கினேன். அதற்கு ‘கிரீன்ஸ்கார்ட்’ என பெயர் வைத்தேன். இயற்கையான முறையில் பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என்பதற்காக அந்த பெயரினை தேர்வு செய்தேன். அடுத்து என்னுடைய நிறுவனத்தில் எந்த மாதிரியான ஊட்டச் சத்துள்ள பொருட்களை உற்பத்தி செய்யலாம் என தேடிய போது எல்லா தரப்பு மக்களும் அதிகமாக சாப்பிடும் உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, புட்டு போன்ற உணவுகள்தான் இருந்தது. நான் இந்த உணவில் கீரை வகைகளை சேர்த்தால் என்ன என்று யோசித்தேன்.

அதனால் அதனை பொடியாக்கி தோசை மாவுடன் சேர்த்து தயாரித்தேன். நன்றாக வந்தது. அதன் பிறகு தோசை அல்லது இட்லி போன்ற வழக்கமான உணவுகளை செய்யும் போது, அந்த மாவில் கொஞ்சம் முருங்கை கீரைப் பொடியை கலந்து தோசைகள் மற்றும் இட்லி செய்தால், குழந்தைகளுக்கு கீரைகளை உணவில் சேர்த்துக் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், உணவும் பச்சை நிறத்தில் இருப்பதால், குழந்தைகளும் அதனை உற்சாகமாக சாப்பிடுவார்கள்.

முருங்கை கீரை எல்லா காலக்கட்டங்களிலும் கிடைக்கக் கூடியது. இந்த மாதிரியான ஒரு யோசனை வந்ததும் நான் இதை ஒரு தொழிலாக செய்யலாம் என நினைத்தேன். ஆனால் வெறும் பொடியினை மாவில் சேர்த்து சாப்பிடும் போது அதில் கசப்பு தன்மை இருந்தது. அதனால் அதன் சுவையை அதிகரிக்க மறுபடியும் ஆராய்ச்சியில் இறங்கினேன். அதன்பிறகு, உலர் பழங்களை சேர்த்து பார்த்தேன். அதில் சுவை கூடவே எங்களுடைய யோசனை வெற்றி பெற்றது. எனக்கும் தொழில் தொடங்கி விடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது’’ என்றவர் இந்த உணவினை மக்களிடம் கொண்டு சேர்க்க பல சிரமங்களை சந்தித்துள்ளார்.

‘‘நான் செய்த உணவுப் பொருட்களை முதலில் காப்புரிமை வாங்கினேன். அடுத்து என்னுடைய உணவுப் பொருட்களை அரசு உணவு கண்காட்சிக்கு கொண்டு சென்ற போது எனக்கு முன்னால் பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. ஒரு பொறியியல் மாணவருக்கும் ஊட்டச்சத்து அடிப்படையிலான மாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான். அதோடு இதனை செய்வதற்கு ஏதேனும் ஆய்வக சோதனை நடத்தியிருக்கிறீர்களா? உங்கள் இலக்கான சந்தையை எவ்வாறு அளவிடுவீர்கள்? என பல கேள்விகளை பலரும் எழுப்பினார்கள். நான் செய்த ஆய்வுகளையெல்லாம் அவர்களிடம் காண்பித்தேன். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் நான் தயாரித்த உணவுப்பொருட்களை பயன்படுத்தக்கூடிய காலம் குறைவு. மேலும் நாங்கள் கொடுக்கும் கீரைப் பொடியை மாவுடன் கலந்து 45 நிமிடங்கள் வரை காத்திருந்து பின்னர்தான் உணவினை தயாரிக்க வேண்டும்.

இதனால் என்னுடைய உணவுப் பொருட்களுக்கு மக்களிடம் வரவேற்பு பெரிய அளவில் கிடைக்கவில்லை. மறுபடி இதில் இருக்கும் குறைகளை எப்படியெல்லாம் நிவர்த்தி செய்யலாம் என்று ஆய்வில் இறங்கினேன். அதில் கிடைத்ததுதான் நூடுல்ஸ் மற்றும் பேக்கரி வகை உணவுகள். அதனால் அதனை செய்யத் தொடங்கினோம். அதற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் மக்கள் தினமும் உண்ணும் உணவான இட்லி. தோசை, சப்பாத்தி போன்றவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

இதனால் நான் அது சார்ந்த ஆய்வில் ஈடுபட்டேன். இட்லி செய்ய ஒரு மாவு, சப்பாத்தி செய்ய ஒரு மாவு என இல்லாமல், ஒரே மாவில் பல வகையான உணவு வகைகளை செய்ய திட்டமிட்டேன். பல உணவு சார்ந்த அறிஞர்கள், நிபுணர்களிடம் இதுகுறித்து கலந்து ஆலோசித்து இறுதியாக ஒரே மாவில் 18 வகையான உணவுப் பொருட்களை செய்யும் முறையினை கண்டுபிடித்தேன். இதன்படி நான் கொடுக்கும் மாவில் இருந்து இட்லி, தோசை, பூரி, புட்டு, முறுக்கு, கொழுக்கட்டை, பீட்சா, நூடுல்ஸ், பான் கேக், வடை, சமோசா, பிஸ்கெட் வகைகள், லட்டு, பிரட், கூழ் அனைத்தும் செய்யலாம். இந்த உணவுப் பொருட்களை தயாரிக்கும் போதே, அதனை பயன்படுத்தும் காலத்தினையும் இரண்டு மாதமாக நீடித்தோம்.

அதிலும் எந்த விதமான ரசாயனம் சேர்க்காமல், அதன் காலத்தினை நீடித்து தயாரித்தோம். இதில் வெற்றி பெறவே எனது நிறுவனத்தை மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (MSME) கீழ் பதிவு செய்தேன். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (FSSAI) பாதுகாப்பு சான்றிதழைப் பெற்றேன். மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் ஃபோரத்தின் (MABIF) தலைமை நிர்வாக அதிகாரி சிவகுமார் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் வணிக கண்காட்சி மற்றும் “ஜல்லிக்கட்டு 2019”ல் பங்கேற்க எங்களுக்கு உதவினார். என்னதான் நான் துறையில் ஜெயித்தாலும், அதனை மக்களிடையே கொண்டு செல்வது எனக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை’’ என்றவர் ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடம் தன் உணவுகளை அறிமுகம் செய்துள்ளார்.

‘‘என்ன உணவுகளை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுவிட்டேன். ஆனால் அதனை தயாரிக்க எனக்கு இயந்திரங்களின் தேவை இருந்தது. ஆனால் அதனை வாங்கக்கூடிய அளவிற்கு என்னிடம் பொருளாதாரம் இல்லை. ஆனால் அரசே என்னைப் போன்றவர்களுக்காக இது போன்ற இயந்திரங்களை வாங்கி அதனை வாடகைக்கு அளித்து வருகிறது. எவ்வளவு நாட்கள் தேவைப்படுகிறதோ, அதற்கான வாடகையினை செலுத்தி பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

நானும் என்னுடைய பொருட்களை அப்படித்தான் உற்பத்தி செய்து வந்தேன். மேலும் வாடிக்ைகயாளர்கள் கொடுக்கும் ஆர்டரின் பேரில்தான் நான் உணவினை தயார் செய்வேன் என்பதால் நான் செய்யும் பொருட்கள் வீணாவதில்லை. நான் செய்து ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. வாய் வார்த்தையாக நாம் எவ்வளவு சொன்னாலும், நம்முடைய பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்பதால், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக என் தயாரிப்புகளை விற்கத் தொடங்கினேன்.

இரண்டு, பதினெட்டானது, தற்போது முருங்கை கீரை மட்டுமில்லாமல் மற்ற கீரைகளை கொண்டு 120 வகை உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறோம். 2,500 வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருந்து உணவுகளை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறேன்’’ என்கிறார் சங்கரலிங்கம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கீரையில் 120 வெரைட்டி உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED கோடையில் எடை இழப்புக்கு உதவும் சப்போட்டா!