×

காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் கைது: புரசைவாக்கத்தில் பரபரப்பு


சென்னை: காதலிக்க வற்புறுத்தி பிளஸ் 2 மாணவியை வாலிபர் ஒருவர் கடுமையாக தாக்கி ஆட்டோவில் கடத்த முயன்றார். இந்த சம்பவம் புரசைவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் இந்து(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புரசைவாக்கம் கந்தப்பா தெருவில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்து ஓட்டேரி பகுதியை சேர்ந்த அபினேஷ்(20) என்பவரை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் மாணவியை அவரது பெற்றோர் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதற்கிடையே மாணவி இந்து கடந்த ஒன்றரை மாதங்களாக தனது காதலன் அபினேஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாலை பள்ளி முடிந்து இந்து தனது தோழிகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காதலன் அபினேஷ் ஆட்டோவில் தனது நண்பர்களுடன் வந்து வழிமறித்து, தன்னிடம் ஏன் பேச விலலை. போன் செய்தாலும் ஏன் எடுக்கவில்லை என கேட்டுள்ளார். இதற்கு இனி நான் உன்னிடம் பேச மாட்டேன். என்னை விட்டுவிடு என்று மாணவி இந்து கூறியுள்ளார். உடனே காதலன் அபினேஷ் மாணவியை சரமாரியாக உதைத்து நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் கடத்த முயன்றார். அப்போது இந்து உடன் வந்த சக மாணவிகள் சத்தம் போட்டுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்ததை கவனித்த அபினேஷ் தனது நண்பர்களுடன் ஆட்டோவில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

மேலும், அபினேஷ் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவியை அவரது பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் பெற்றோர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி சம்பவம் நடந்த புரசைவாக்கம் கந்தப்பா தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, பள்ளி மாணவியை தாக்கி வலுக்கட்டாயமாக ஆட்டோவில் அபினேஷ் கடத்த முயன்றது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் அபினேஷை அதிரடியாக ேநற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் கைது: புரசைவாக்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Purasaivakam ,CHENNAI ,
× RELATED பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்; ஆட்டோ,...