×
Saravana Stores

சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா தேரோட்டம் கோலாகலம்: இன்றிரவு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி


நாகை: சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தகஷ்டி விழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. முருகா முருகா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இன்றிரவு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோயில் உள்ளது. இது கி.பி.4ம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்ட மாடகோயிலாகும். வசிஷ்ட மகரிஷி, காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்கம் அமைத்து பூஜித்த கோயிலாகும். பூஜை முடிவில் வெண்ணெய் சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை. இதனால் கோயிலில் வெண்ணெய்பெருமான் நவநீதேஸ்வரராகவும், பார்வதி வேல்நெடுங்கண்ணியாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.

தனது தாயாரான சிக்கல் வேல்நெடுங்கண்ணியிடம் வேல்வாங்கி திருச்செந்தூரில் சூரனை முருகன் வதம் செய்ததாகவும், அந்த கொலை பாவம் தீர கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் முருகன் தவம் இருந்ததாகவும் ஐதீகம். இந்நிலையில் சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 12ம் தேதி துவங்கியது. அதன்பிறகு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. காலை 6 மணிக்கு சிங்காரவேலவர் (முருகன்) வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர். 7.15 மணிக்கு கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து தேர் புறப்பட்டது. முருகா முருகா என கோஷமிட்டமிட்டவாறு தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கீழ வீதி வந்து மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிங்காரவேலவர் சூரனை வதம் செய்ய தனது தாயார் பார்வதியான வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி இன்றிரவு நடக்கிறது. வேல் நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும்போது சிங்காரவேலவர் மேனியில் வியர்வை சிந்தும் அற்புத காட்சி நடைபெறும். நாளை இரவு தங்க ஆட்டுகிடா வாகனத்தில் சிங்காரவேலவர் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடக்கிறது. 19ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 20ம் தேதி வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. 21ம் தேதி விடையாற்றி, 22ம் தேதி யயதாஸ்தான பிரவேசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

The post சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா தேரோட்டம் கோலாகலம்: இன்றிரவு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Gandashashti Festival Chariot Kolagalam ,Chikal Singaravelavar Temple ,Shaktivel ,Nagai ,Gandhakashti festival ,Chikal Singharavelar Temple ,Muruka Muruka Kosha ,Kanthashasti Festival Chariot ,Chikal Singharavelavar Temple ,Sakthivel ,
× RELATED ஆலத்தூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள்